வாஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சீனா அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாகனம், விண்வெளி, செமிகண்டெக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு இன்றியமையாததாக விளங்கும் மிகவும் அரிதான உலோகங்கள் மற்றும் காந்தங்கள் உள்ளிட்ட முக்கிய உயர் தொழில்நுட்பப் பொருட்களின் ஏற்றுமதியை நிறுத்த சீனா முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, முக்கியமான இறக்குமதிகள் குறித்த தேசிய பாதுகாப்பு மதிப்பாய்வின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சீன பொருட்களின் இறக்குமதிக்கு தற்போது 245 சதவீதம் வரையிலான வரிவிதிப்பை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அடிப்படையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலியம், ஜெர்மானியம், ஆன்டிமனி மற்றும் ராணுவ பயன்பாடுகளுடன் கூடிய பிற மூலோபாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு சீனா சமீபத்தில் தடைவிதித்தது. இந்த வாரத்தில் மட்டும், 6 அரிய வகை உலோகங்கள் மற்றும் காந்தங்களின் ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. நெருக்கடியை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விநியோகத்தை முடக்கியதால் தற்போது சீனா 245 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.