இஸ்லாமாபாத்: இந்தியாவும் பாகிஸ்தானும் இரு வேறு நாடுகள் என்று வலியுறுத்தியுள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீர், இரண்டு நாடுகள் என்ற கொள்கையை ஆதரித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை நடந்த வெளிநாட்டுவாழ் பாகிஸ்தானியர்களின் மாநாட்டில் பேசிய அசிம், பாகிஸ்தான் எவ்வாறு உருவானது என்பதை உங்களின் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள் என்று பாகிஸ்தானியர்களை வலிறுத்தினார். கூட்டத்தில் பேசிய ராணுவ தளபதி கூறுகையில், “வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் நாம் இந்துக்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று நமது முன்னோர்கள் நம்பினார்கள். நமது மதம் வேறு, பழக்க வழக்கங்கள் வேறு, மரபுகள் வேறு, நமது சிந்தனைகள், நோக்கங்கள் வேறு. இங்கிருந்துதான் இரு நாடுகள் கொள்கைகான அடித்தளம் அமைக்கப்பட்டது. நாம் இரண்டு வேறு நாடுகள், ஒரே நாடு அல்ல.
நமது முன்னோர்கள் மகத்தான சாதனைகளைச் செய்துள்ளனர். மேலும் இந்த நாட்டை உருவாக்க நாம் நிறைய தியாகங்களைச் செய்துள்ளோம். இதை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று நமக்குத் தெரியும். எனதருமை சகோதர, சகோதரிகளே, மகன்களே, மகள்களே பாகிஸ்தானின் கதையை ஒருபோதும் மறக்காதீர்கள். உங்களின் அடுத்த தலைமுறைக்கு பாகிஸ்தானின் கதையைச் சொல்ல மறக்காதீர்கள். அதன்மூலம் பாகிஸ்தானுடனான அவர்களின் உறவுகள் பலவீனமடையாமல் இருக்கும். அது மூன்றாவது தலைமுறையாக இருந்தாலும் சரி, நான்காவது, ஐந்தாவது தலைமுறைகளாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு பாகிஸ்தான் என்றால் என்னவென்று புரியும்.
தீவிரவாதிகளை நாம் விரைவில் விரட்டியடிப்போம். பிஎல்ஏ, பிஎல்எஃப் மற்றும் பிஆர்ஏ உள்ளட்டவைக்களைச் சேர்ந்த இந்த 1500 தீவிரவாதிகளால் பலுச்சிஸ்தானை நம்மிடமிருந்து பிரித்து விட முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு சில தீவிரவாதிகள் பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்க முடியும் என்று பாகிஸ்தானின் எதிரிகள் நினைக்கிறார்களா? பத்து தலைமுறைக்கும் கூட தீவிரவாதிகளால் பலுச்சிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு தீங்கு செய்யமுடியாது” என்று தெரிவித்தார்.
கஷ்மீரைப் பற்றி பேசிய அசின் முனீர், “எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது, அது (காஷ்மீர்) எங்களுடைய கழுத்து நரம்பு (jugular vein), எங்களின் கழுத்து நரம்பாக இருக்கும். நாங்கள் எங்களின் காஷ்மீர் சகோதரர்களை அவர்களின் வீரமிக்க போராட்டத்தில் விட்டுவிட மாட்டோம் என்று தெரிவித்தார்.