புதுச்சேரி,
நாடு முழுவதும் நாளை (18-ம் தேதி) புனித வெள்ளி அனுசரிக்கப்பட உள்ளது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாகவும், அவர் மீண்டும் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் தினமாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். புனித வெள்ளி என்பது துக்க நாளாகவே அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தியாகத்தை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவின் சிறந்த போதனைகள் அவர் விட்டுச்சென்ற மரபுகளை நினைவு கூறுகின்றன.
இந்தநிலையில், கிறித்துவ சகோதர – சகோதரிகளுக்கு, இறைவனின் ஆசீர்வாதங்கள் எப்போதும் பொழிய பிரார்த்தனை செய்வதாக புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இயேசு கிறிஸ்துவின் அளப்பரிய தியாகத்தைப் புனித வெள்ளி நமக்கு நினைவூட்டுகிறது. இயேசு கிறிஸ்து எவ்வாறு ஒவ்வொருவரிடமும் அன்பு காட்டினார். மனித குலம் மீட்படைய வேண்டும் என்பதற்காக அவர் எவ்வாறு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்பதை நாம் நினைத்துப் பார்ப்பதற்கான தருணத்தை இந்தாள் வழங்குகிறது. இந்தப் புனிதமான நாளில், கர்த்தரின் கரங்களில் ஆறுதல் அடைந்து, அவரின் தெய்வீக இருப்பை உணருங்கள் இறைவனின் அன்பின் ஒளி உங்கள் மீது பிரகாசிக்கட்டும்; வாழ்க்கை மேலும் சிறக்கட்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.