‘வளர்ப்பு நாய் விலை ரூ.50 கோடி’ – அமலாக்கத் துறை ரெய்டுக்கு வித்திட்ட சமூக வலைதளப் பதிவு

புதுடெல்லி: பெங்களூருவைச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ.50 கோடிக்கு வளர்ப்பு நாய் ஒன்றை இறக்குமதி செய்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, அந்நியச் செலாவணி விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை அறிய அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “சதீஷ் என்பவரிடம் பிப்ரவரியில் அவர் வாங்கியதாகக் கூறப்படும் ‘கடாபோம்ப் ஒகாமி’ கலப்பின நாய் குறித்து அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கூறியது பொய் என்று தெரியவந்தது. இவ்வளவு விலை உயர்ந்த நாயை வாங்க சம்மந்தப்பட்ட நபருக்கு எந்த வழியும் இல்லை. சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்க்க அவர் அப்படி ஒரு செய்தியை உருவாக்கி இருக்கிறார்” என்றனர்.

தகவல்களின் படி, சம்மந்தப்பட்ட நபர், தான் உலகிலேயே அதிக விலையுள்ள நாயை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததாக தெரிவித்திருந்தார். அந்த நாய் காகஷியன் ஷெப்பர்ட் மற்றும் ஓநாயின் கலப்பினமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். சமூக வலைதளத்தில் வைரலான இந்தப் பதிவு அமலாக்கத் துறையினரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் அடிப்படையில், அந்த தகவலின் உண்மைத்தன்மையை அறிய அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட நபரின் வீட்டுக்கு விசாரணைக்குச் சென்றனர். அங்கு அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவல் போலியானது என்று கண்டறிந்தனர்.

மேலும், சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட நாயின் படம் கூட பதிவிட்டவரின் பக்கத்து விட்டுக்காருக்கு சொந்தமானது என்றும், அதன் விலை ஒரு லட்சத்துக்குள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.