சென்னை: “அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. எனவே, கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் எவ்வித கருத்துகளையும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்க வேண்டாம்,” என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. கூட்டணி ஆட்சி விவகாரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தக் கட்டுப்பாடு கவனம் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு, அவர்களது நல்லாசியோடு அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கட்சித் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.
ஆகவே, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகளும், கட்சியின் மீது பற்று கொண்டுள்ளவர்களும், கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த எவ்வித கருத்துகளையும், கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் இன்னபிற தகவல் தொடர்பு ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை, “தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “கூட்டணி ஆட்சி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆகிய இருவரும் எடுக்கும் முடிவே இறுதியானது. தேவையற்ற சந்தேகங்களை எழுப்பி, அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது.