MI vs SRH IPL Today Match: மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. டாஸ் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். இதன்படி, சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஓப்பனிங் இறங்கினர். இருவரும் செம பார்மில் இருப்பதால், சன்ரைசர்ஸ் அணி சரவெடி காட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறத்தொடங்கினர். அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட்டுக்கு பந்துகள் சரியாக பேட்டில் படவே இல்லை. அந்தளவுக்கு மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் துல்லியமான லைன் மற்றும் லென்தில் பந்துகளை வீசினர்.
இருந்தாலும் சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்களுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா கொடுத்த கேட்சுகளை வில் ஜாக்ஸ், கரண் சர்மா தவறவிட்டனர். அடுத்தடுத்து இவருக்கும் கேட்சுகளை மும்பை பீல்டர்கள் விட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா வீசிய ஓவரில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார் அபிஷேக் சர்மா. ஆனால், அதுவும் ரிப்ளேவில் நோபால் என தெரியவந்தது. இத்தனை அதிர்ஷ்டங்களால் மும்பை பிளேயர்களே விரக்தி அடைந்தனர். அதேநேரத்தில் சன்ரைசர்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதிர்ஷ்டம் தேடிவந்தபோதும், மும்பை அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததால் சன்ரைசர்ஸ் அணியால் ஒரு சிக்சர்கூட அடிக்க முடியவில்லை. 18வது ஓவரிலேயே சன்ரசைர்ஸ் அணிக்கு முதல் சிக்சர் கிடைத்தது.
அப்படியென்றால் மும்பை அணி எந்தளவுக்கு துல்லியமாக பந்துவீசியிருக்கும் என நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இத்தனைக்கும் மும்பை அணியின் ஆஸ்தான சுழற்பந்துவீச்சாளர் கரண் சர்மா காயம் காரணமாக ஒரு பந்துகூட வீசவில்லை. அவருக்கு பதிலாக வில் ஜாக்ஸ் பந்துவீசி அமர்களப்படுத்தினார். அபிஷேக் 10, டிராவிஸ் ஹெட் 28, கிளாசன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் அன்கித் வெர்மா 8 பந்துகளில் 18 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் ஆட்டத்தை தொடர்ந்தது. பேட்டிங் பிட்சாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மும்பை பிட்ச் வழக்கத்துக்கு மாறாக பந்துவீச்சுக்கு உகந்ததாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் சிக்சர் மற்றும் பவுண்டரி அடிக்க மிகவும் கஷ்டப்பட்டனர். மும்பை அணியில் ஓப்பனிங் இறங்கிய ரோகித் சர்மா மட்டும் 3 சிக்சர்கள் பறக்கவிட்டார். ஆனால் அவரும் அதிகநேரம் இல்லாமல் 26 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.