புதுடெல்லி,
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் சார்பில் ஹெட்மயர், பராக், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய நிதிஷ் ராணா,
” சூப்பர் ஓவரில் யாரை அனுப்ப வேண்டும் என்று அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். இது தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல. ஹெட்மயர் மற்றும் பராக்கை அனுப்பியது நல்ல முடிவு தான். ஹெட்மயர் எங்கள் அணியின் ஃபினிஷர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என தெரிவித்தார்.