நாமக்கல்: “தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்க வேண்டும். வெறும் அறிக்கை மட்டுமே கொடுத்து வருவது சரியில்லை” என நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.
குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக, நாம் தமிழர் அமமுக உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி ஆட்சி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது சரி தான். திமுகவுக்கு சரியான எதிர்க்கட்சி அதிமுகதான். யாரை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். யாரை அமர வைக்கக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்க வேண்டும். வெறும் அறிக்கை மட்டுமே கொடுத்து வருவது சரியில்லை. திமுக ஆட்சியில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறது என கூறுவது பொய். மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் திமுகவினருக்கு பிடிக்காது. வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி, தமிழ்நாட்டுக்கு வருவதால் தமிழக ஆட்சி சிறப்பான ஆட்சி என்று சொல்ல முடியாது. அதுவும் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து வருவதில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் இருந்து தான் வருகின்றனர்” என்றார்.