ஏலியன்கள் இனியும் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில் வரும் பூதங்கள் அல்ல. பூமியிலிருந்து தொலை தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றிவரும் கிரகத்தில் உயிர்கள் இருக்கலாம் என்பதற்கான வலுவான ஆதாரங்களை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஏலியன்கள் இருக்கிறதா, இல்லையா என்ற கேள்விக்கு, ‘இருக்கிறது அல்லது இருக்கலாம்’ என நாம் பதில் சொல்ல முக்கிய காரணம், இந்த பிரபஞ்சத்தின் பிரமாண்டம்தான்.
அதுதான் நம்மை இன்னும் இன்னும் ஆழமாக விண்வெளியில் தேடிப்பார்க்க வைக்கிறது. அப்படி கண்டறியப்பட்ட கிரகம்தான் K2-18b.

இந்த கிரகம் பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தூரத்தில் சிம்ம நட்சத்திரக் கூட்டத்தில் உள்ளது.
இந்த கிரகத்தில் உள்ள சில மூலக்கூறுகள் பூமியில் இருக்கக் கூடியவை. அதுவும் எளிமையான உயிரினங்களால் மட்டுமே உருவாக்க முடியும் வேதியல் சேர்மங்கள்.
இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு தலா 1 விழுக்காடு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் நீராவி இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் பின்னர் 0.1%க்கும் குறைவாகவே உள்ளதாகக் கூறுகின்றனர்.
இவைத் தவிர டைமெத்தில் சல்பைடு (DMS) மற்றும் டைமெத்தில் டைசல்பைடு (DMDS) ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன. இவைதான் உயிர்கள் இருப்பதற்கான சாட்சியமாகப் பார்க்கப்படுகிறது.
நாம் படத்தில் காண்பது போன்ற, அறிவாற்றல் மிக்க ஏலியன்கள் இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் நிச்சயமாக அங்கே உயிர்கள் இருக்கின்றன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கிரகத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி மூலம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த கிரகத்தில் வெப்பமான, உயிர்கள் நிறைந்த கடல் இருப்பதாக இந்த திட்டத்தை வழிநடத்திய முனைவர் நிக்கு மதுசுதன் தெரிவித்துள்ளார்.
உயிர் வாழ ஓரளவு தகுதியான கிரகங்கள் கண்டறியப்பட்டிருந்தாலும், உயிர்கள் வாழ்ந்துகொண்டிருப்பதகற்கான அடையாளங்களை ஒரு கிரகத்தில் கண்டறிவது இதுவே முதன்முறை.
Alien இருக்கிறதா?
“பிரபஞ்சத்தில் பூமியில் உள்ள உயிர்கள் மட்டும் தனியாக இருக்கிறதா என்ற அடிப்படை கேள்விக்கு நாம் விடைகண்டறியும் தருணம் இதுவாக இருக்கலாம்” என மதுசுதன் தெரிவித்துள்ளார்.
நியு யார்க் டைம்ஸ் தளத்தில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கிரக விஞ்ஞானி ஸ்டீபன் ஷ்மிட், இது ஒரு குறிப்புதான். ஆனால், இதை வைத்து அந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்வதாகத் தெரிவித்துவிட முடியாது எனக் கூறியுள்ளார்.
K2-18b கிரகத்தில் உயிர்கள் இருப்பதை உறுதி செய்ய இன்னும் ஆழமான ஆராய்ச்சிகள் தேவை என மதுசுதனின் குழுவினரும் தெரிவித்துள்ளனர். “முன்கூட்டியே ஏலியன்கள் இருப்பதாகக் கூறுவதில் யாருக்கும் லாபமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.