அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார். அப்போது விஜிக்கும் செல்வராஜிக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. செல்வராஜ், விழுப்புரத்தில் உள்ள தடய அறிவியல் துறையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். அதனால் தனக்கு சில அதிகாரிகளைத் தெரியும். அவர்கள் மூலம் அரசு வேலை வாங்கிக் கொடுக்க முடியும் என செல்வராஜ், விஜியிடம் கூறியிருக்கிறார். அதை உண்மையென நம்பிய விஜியும் கல்வி மையத்தில் படித்த மாணவ, மாணவிகள் 26 பேருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். இதையடுத்து அரசு வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் வேலைக்கு ஏற்ப பணம் செலவாகும் என செல்வராஜ் தெரிவித்திருக்கிறார். அதற்கு விஜியும் சம்மதித்திருக்கிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை விஜி, 75 லட்சம் ரூபாயை செல்வராஜிடம் ரொக்கமாகவே கொடுத்திருக்கிறார். ஆனால், வாக்குறுதி அளித்தப்படி செல்வராஜ், வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. அதனால் கொடுத்த பணத்தை செல்வராஜிடம் விஜி கேட்டபோது அவர் ஏமாற்றி வந்திருக்கிறார்.

அதனால் விஜி, அரசு ஊழியர் செல்வராஜ் குறித்து புகாரளிக்க காவல் நிலையங்களுக்கு சென்றிருக்கிறார். உரிய ஆவணங்கள் இல்லாததால் போலீஸார் வழக்கை எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில்தான் விஜி, சட்ட போராட்டம் நடத்தி பணத்தைப் பெற முடிவு செய்திருக்கிறார். அதனால், செல்வராஜ் வேலை செய்யும் அரசு அலுவலகத்துக்குச் சென்று உயரதிகாரிகளிடம் செல்வராஜ் குறித்து முறையிட்டிருக்கிறார். உடனே செல்வராஜிடம் உயரதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அப்போது நான் பணம் வாங்கியது உண்மைதான், அதை எப்படியாவது திருப்பி கொடுத்து விடுகிறேன் என செல்வராஜ் தெரிவித்திருக்கிறார். அதை ஆதாரமாக்கிய விஜி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் செல்வராஜ் மீது புகாரளித்தார். போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் ராதிகா மேற்பார்வையில் துணை கமிஷனர் செல்வராஜ் ஆலோசனையில் வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவின் இன்ஸ்பெக்டர் ராமசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.
குற்றம் சுமத்தப்பட்ட அரசு ஊழியர் செல்வராஜிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர், விஜியிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 75 லட்சம் ரூபாயை வாங்கியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து செல்வராஜை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 75 லட்சம் ரூபாயை என்ன செலவு செய்தாய் என விசாரணையின் போது போலீஸார் கேட்ட போது அவர் தன்னுடைய சோக கதையை கூறி அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்திருக்கிறார்.
இதுகுறித்து வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் கூறுகையில், “செல்வராஜின் அப்பா கணேசன், தடய அறிவியல் துறை சென்னை அலுவலகத்தில் உதவியாளராக வேலைப்பார்த்திருக்கிறார். கடந்த 1998-ம் ஆண்டு நடந்த விபத்தில் கணேசன் உயிரிழந்துவிட்டார். அதனால் டிகிரி முடித்த செல்வராஜிக்கு கருணை அடிப்படையில் தடய அறிவியல் துறையில் இளநிலை உதவியாளர் வேலை கிடைத்திருக்கிறது. அந்தச் சம்பளத்தில் செல்வராஜ் குடும்பத்தை நடத்தி வந்தார். அரசு வேலை என்றாலும் செல்வராஜின் குடும்ப சூழலுக்கு அந்த சம்பளம் பணம் போதவில்லை.

செல்வராஜின் அம்மா, மாற்றுத்திறனாளி தம்பி ஆகியோருக்கு சிறுநீரக கோளாறு பிரச்னை இருந்து வந்திருக்கிறது. அதற்காக வட்டிக்கு பணம் வாங்கி மருத்துவ செலவை சமாளித்திருக்கிறார் செல்வராஜ். வாங்கும் சம்பளத்தை வட்டிக்கு கொடுத்துவிட்டு கடனாளியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார். இந்தச் சமயத்தில் செல்வராஜின் சகோதரியின் கணவர் இறந்துவிட சகோதரியின் இரண்டு மகள்களுக்கும் செல்வராஜே திருமணம் செய்து வைத்திருக்கிறார். அதனால் அவருக்கு கடன் அதிகளவில் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில் மாற்றுத்திறனாளியான தம்பிக்கு திருமணம் செய்து வைத்த செல்வராஜ், அவரின் குடும்ப செலவையும் இவரே கவனித்து வந்திருக்கிறார். செல்வராஜிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அதனால் அம்மா, சகோதரி, தம்பி, தன்னுடைய குடும்பம் என அனைவரின் செலவுகளை ஏற்றுக் கொண்ட செல்வராஜ், மருத்துவச் செலவு, குடும்ப செலவுகளை சமாளிக்க வட்டிக்கு அதிகளவில் கடன் வாங்கியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி, அரசு ஊழியர் செல்வராஜிடம் அரசு வேலை வாங்கித் தர முடியுமா எனக் கேட்டிருக்கிறார். உடனே செல்வராஜின் கிரிமினல் மூளை யோசிக்கத் தொடங்கியிருக்கிறது.

இதையடுத்து விஜியிடமிருந்து 75 லட்சம் ரூபாயை வாங்கிய செல்வராஜ், அதன் மூலம் தன்னுடைய கடன்களை அடைத்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் செல்வராஜின் அம்மா, தம்பி ஆகியோர் அடுத்தடுத்து கடந்த ஆண்டு மரணமடைந்திருக்கிறார்கள். செல்வராஜின் சம்பளத்தை நம்பியே அவரின் ஓட்டுமொத்த குடும்பமும் வாழ்ந்து வந்திருக்கிறது. அதனால்தான் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்திருக்கிறார் செல்வராஜ். விஜியிடம் செல்வராஜ் ரொக்கமாகவே பணம் வாங்கியிருந்தாலும் மனசாட்சிபடி வாங்கியதை எங்களின் விசாரணையின் போது ஒப்புக் கொண்டார். அதை நீதிமன்றத்திலும் செல்வராஜ் கூறியிருக்கிறார். செல்வராஜ் கைது செய்யப்பட்டதும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செல்வராஜ் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும்பட்சத்தில் வேலையும் பறிப்போகும்” என்றனர்.