அசைவ உணவு பிரச்சினை: அரசியல், போலீஸ் தலையீடு வரை சென்ற மும்பை அபார்ட்மென்ட் மோதல்!

மும்பை: மகாராஷ்டிராவின் காட்கோபரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அசைவ உணவு சாப்பிடுவது தொடர்பாக அங்கு வசிக்கும் குஜராத்தி மற்றும் மராத்தி குடும்பங்களுக்கு இடையே மோதல் வெடித்தது. அரசியல் தலையீட்டை உள்ளடக்கிய இந்த மோதல், போலீஸார் தலையிட்டு சமாதானம் செய்யும் அளவுக்கு தீவிரமானது.

மீன் சாப்பிட்ட மராத்தி குடும்பத்தினரை அவர்களது பக்கத்து வீட்டாரான குஜராத்தி குடும்பத்தினர் ‘அசுத்தமானவர்கள்’ என விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம், காட்கோபரில் உள்ள சம்பாவ் தர்சன் கூட்டுறவு வீட்டுவசதி குடியிருப்பில் நடந்ததுள்ளது. அங்கு வசிக்கும் ராம் ரிங்கே என்பவரிடம் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குஜராத்தி குடும்பத்தினர், “மராத்தி மொழி பேசும் நீங்கள் அசுத்தமானவர்கள். அதனால்தான் மீன் மற்றும் இறைச்சி சாப்பிடுகிறீர்கள்” என விமர்சித்தாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து ராம் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சியைத் தொடர்பு கொண்டு அசைவ உணவுத் தொடர்பாக தாங்கள் சந்திக்கும் அவமரியாதைகளைத் தெரிவித்துள்ளார். இதனிடையே, புதன்கிழமை இரவு மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவைச் சேர்ந்தவர்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்து குஜராத்தி குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர். மராத்தி பேசும் குடியிருப்பாளர்களை அவமதித்தால் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியது இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.

என்என்எஸ் தலையீடு: இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலானது. வீடியோவில் எம்என்எஸ் உள்ளூர் தலைவர், “அவர்கள் மராத்தியர்கள் அசுத்தமானவர்கள் என்று நினைக்கிறார்கள். அப்படியானால் மகாராஷ்டிராவும் அசுத்தமானது என்றே அர்த்தம். பிறகு ஏன் அவர்கள் அசுத்தமான இடத்துக்கு வந்தார்கள்?” என்று கேள்வி கேட்பது தெரிகிறது. மேலும் அவர், இந்த அவமதிப்புத் தொடர்ந்தால் குடியிருப்பை விட்டு குஜராத்திகள் வெளியேற முடியாது என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.

இந்த நிலையில், ராம் ரிங்கேவை அடுக்குமாடி குடியிருப்பாளர்களின் பொதுவான வாட்ஸ் அப் குழுவில் இருந்து வெளியேற்றுமாறு சில குடியிருப்புவாசிகள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து எம்என்எஸ் உள்ளூர் தலைவர் தலைவர் வியாழக்கிழமை மீண்டும் அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றுள்ளார்.

போலீஸ் சமாதான முயற்சி: அங்கு அவர் குடியிருப்பாளர்கள் சங்கத் தலைவர் ராஜ் பார்தேவிடம், ராம் ரிங்கேவுக்கு தொல்லை கொடுப்பது தொடர்ந்தால் கட்சி அதன் சொந்த வழிமுறைகளில் பதிலடி கொடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்தச் சம்பவம் வேகமாக சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமாதான முயற்சியில் இறங்கினர்.

இது குறித்து மூத்த காவல் துறை அதிகாரி அவினேஷ் கல்தாடே கூறுகையில், “குடியிருப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததில் இருந்து பிற உறுப்பினர்களால் துன்புறுத்தப்படுவதாக கூறுகிறார்” என்றார். மேலும், குடியிருப்பாளர்கள் சங்கக் கூட்டத்தினைக் கூட்டி, குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்: அசைவ உணவு தொடர்பான இந்த வாக்குவாதம் எதிர்க்கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் வாடெட்டிவார் குஜராத்திகள் தொடர்ந்து மராத்தியர்களை அவமதிப்பது குறித்து தேவேந்திர பட்நாவிஸ் அரசை சாடியுள்ளார். அவர் கூறுகையில், “மகாராஷ்டிரா முதல்வரும் அசைவ உணவில் விருப்பமுள்ளவர்.

உணவு மற்றும் மொழியில் அரசு பின்பற்றும் கொள்கைகள் மும்பையில் மராத்தியர்களுக்கும் குஜராத்தியர்களுக்கும் இடையில் பிளவினை உண்டாக்கும் நோக்கம் கொண்டது போல் தெரிகிறது. இது தவறானது. இப்போது, மகாராஷ்டிரா மராத்தியரால்தான் ஆளப்படுகிறாதா என்று அரசைப் பார்த்து மாரத்தி மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.