சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் 2025 அவ்வளவு சிறப்பாக இல்லை. இதுவரை இந்த சீசனில் விளையாடிய 7 போட்டிகளில் 5ல் தோல்வி அடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இதனால் மீதமுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. மேலும் துரதிஷ்டவசமாக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்குவாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025 தொடரிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதில் எம்எஸ் தோனி மீண்டும் கேப்டன்சி பொறுப்பை ஏற்றுள்ளார். தோனியின் தலைமையில் கொல்கத்தா அணிக்கு எதிரான மோசமான தோல்வி அனைவரின் புருவங்களையும் உயர்த்தியது.
மேலும் படிங்க: ‘ஃபிக்ஸிங்’ செய்தாரா தோனி? கிளம்பும் சர்ச்சை.. உண்மை பின்னணி என்ன?
அதிரடி மாற்றங்கள்
அதன் பிறகு லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டது சென்னை அணி. அதன்படி இளம் வீரர் சேக் ரசீதிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடினார். மேலும் காயம் காரணமாக வெளியேறிய ருதுராஜ்க்கு பதிலாக மும்பையை சேர்ந்த 17 வயதான இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவை அணியில் எடுத்தது சிஎஸ்கே. அதேபோல காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங்க்கு பதிலாக தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது அணியில் எடுத்துள்ளது. 21 வயதாகும் இவரை ஐபிஎல் ஏலத்தில் எந்த ஒரு அணியும் எடுக்கவில்லை. தற்போது 2.2 கோடிக்கு சென்னை அணி வாங்கி உள்ளனர்.
டெவால்ட் பிரெவிஸ் டி20 போட்டிகளில் ஒரு பீஸ்ட்டாக இருந்து வருகிறார். பேபி ஏபி என்று அழைக்கப்படும் இவரின் டி20 ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 145க்கும் அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு முழுவதும் சென்னை அணிக்கு பேட்டிங் தான் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இவரின் வருகை சென்னை அணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 20-ம் தேதி வான்கடே மைதானத்தில் விளையாட உள்ளனர். சென்னையை போலவே மும்பை இந்தியன்ஸ் அணியும் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளனர், இதனால் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடக்க உள்ள போட்டியின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
Indeed, it’s #Yellove time ahead! #WhistlePodu pic.twitter.com/aI9Q4r3cL4
— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2025
சென்னை அணியின் பிளேயிங் 11ல் மாற்றம்
டெவால்ட் பிரெவிஸ்க்கு உடனடியாக பிளேயிங் லெவலில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த சீசனில் விளையாடி உள்ளார். இதனால் இவருக்கு வான்கடே மைதானத்தை பற்றி நன்கு தெரியும் என்பதால் மும்பை அணிக்கு எதிரான இவரை விளையாட வைக்க அதிக வாய்ப்பு உள்ளது. டெவால்ட் பிரெவிஸ் மிடில் ஆர்டரில் வந்து தேவையான நேரத்தில் ரன்களை அடித்து கொடுக்க முடியும் என்பதால் இவரின் தேவை சென்னை அணிக்கு அதிகரித்துள்ளது. நாளைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் படிங்க: சிஎஸ்கேவில் இவருக்கு பதில் இவர்.. நுழையும் அதிரடி வீரர்.. இனி வெற்றி கன்பார்ம்!