புதுடெல்லி: விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் என்று சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ஏசிஐ) தெரிவித்துள்ளது.
உலகின் வேகமான சிவில் விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் விமானப் பயணிகள் போக்குவரத்தின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 10.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது சீனாவுக்கான மதிப்பீடான 12 சதவீதத்தை விட குறைவாகும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவுக்கு மிகப் பெரிய விமானச் சந்தை உள்ளது.
இந்நிலையில் ஏசிஐ அமைப்பின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய இயக்குநர் ஸ்டெஃபனோ பரோன்சி, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை இந்தியா தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. மேலும் விமானப் பயணிகள் போக்குவரத்தில் ஒரு வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது.
இந்தியாவின் விமானப் பயணிகள் வளர்ச்சி விகிதம் 2026-ல் 10.5% ஆகவும் 2027-ல் 10.3% ஆகவும் இருக்கும் என ஏசிஐ மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவின் வளர்ச்சி விகிதம் முறையே 8.9% மற்றும் 7.2% ஆக இருக்கும். எனவே 2026-ல் சீனாவை இந்தியா முந்தும்.
2023-27-ல் இந்தியாவின் விமானப் பயணிகள் போக்குவரத்துக்கான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் 9.5% ஆக இருக்கும். இது சீனாவின் 8.8 சதவீதத்தை விட அதிகம் ஆகும்.
2023-2053 காலகட்டத்தில் 5.5 சதவீதத்துடன் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் விமானச் சந்தையாகவும் இந்தியா இருக்கும். அதேநேரத்தில் சீனாவின் வளர்ச்சி 3.8 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில் தற்போது 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலைய மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும்.