ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு ஐ.பி.எல் சீசனில் வெளி மைதானங்களில் வெற்றிகளைக் குவித்தாலும், சொந்த மைதானத்தில் அதன் தோல்விநடை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று பெய்த மழையால், பெங்களூரு vs பஞ்சாப் போட்டி 14 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஒரு கட்டத்தில், 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, 49 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற தனது சொந்த சாதனையையே முறியடிக்கப் பார்த்தது.

நல்வாய்ப்பாக, டிம் டேவிட்டின் அதிரடி அரைசதத்தால் 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்கள் என்ற சற்று கௌரவமான ஸ்கோரை எட்டியது ஆர்.சி.பி.
அதையடுத்து 96 என்ற இலக்கை நோக்கிக் களமிறங்கிய பஞ்சாப் அணி, தொடக்கத்தில் தடுமாறினாலும் 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 19, 2025
இந்தத் தோல்வியின் மூலம், ஆர்.சி.பி அணி இந்த சீசனில் தனது சொந்த மைதானத்தில் இன்னும் வெற்றிக் கணக்கைக் கூட தொடங்காமல் ஹாட்ரிக் தோல்வியைப் பதிவுசெய்திருக்கிறது.
இருப்பினும், இப்போட்டியில் ஆர்.சி.பி-க்கு ஒரே ஆறுதலாக, 26 பந்துகளில் அரைசதம் அடித்த டிம் டேவிட்டுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆட்ட நாயகன் டிம் டேவிட் ஐ.பி.எல் வரலாற்றில் கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு, ஐ.பி.எல் போட்டிகளில் முதல் இன்னிங்ஸில் குறைவான ரன்கள் அடித்த அணிகளில் அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார்.
2013-ல் சி.எஸ்.கேவுக்கெதிரான போட்டியில் 106 ரன்கள் குவித்த ஆர்.சி.பி அணியில் விராட் கோலி 29 பந்துகளில் 56 ரன்கள் அடித்திருந்தார்.

இப்போது, நேற்றைய போட்டியின் அரைசதத்தின் மூலம் கோலியை ஓரங்கட்டி அவரின் முதலிடத்துக்கு டிம் டேவிட் முன்னேறியிருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல், ஐ.பி.எல் வரலாற்றில் முதல் இன்னிங்ஸில் 100-க்கும் குறைவான ரன்களை அடித்த அணியில் அரைசதம் அடித்த ஒரே வீரர் என்ற புதிய சாதனையையும் டிம் டேவிட் படைத்திருக்கிறார்.
மேலும், இப்போட்டியின் தோல்வியின் மூலம், ஐ.பி.எல்லில் ஒரு மைதானத்தில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணி என்ற மோசமான சாதனையை டெல்லியிடமிருந்து பறித்து ஆர்.சி.பி (46) தனக்குச் சொந்தமாக்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…