சென்னை: உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதத்தினரால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஈஸ்டர் பண்டிகையையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, வைகோ, ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வைகோ: இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. அதுபோலவே, ஈழத்திலும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும். அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செல்வப்பெருந்தகை: கிறிஸ்துவ சிறுபான்மை சமுதாயத்தினர் ஒன்றிய பா.ஜ.க. அரசால் பாரபட்சத்தோடு நடத்தப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகி வருகிறார்கள். அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. மதநல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கிறிஸ்துவ சமுதாயம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஆதரவாக எப்போதும் செயல்பட்டு வருகிறது.
இனி வருகிற காலங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து செயல்படும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராமதாஸ்: அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கும் உள்ள கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈஸ்டர் திருநாளின் நோக்கத்தைப் போலவே தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும்; வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்று கூறி, கிறித்தவ சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமணி ராமதாஸ்: உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும். ஈஸ்டர் திருநாள் தெரிவிக்கும் செய்தியை பின்பற்றும் வகையில் நாம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்.
தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும். அத்துடன், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்க பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.