புதுடெல்லி: ஆன்மிகம் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் மோசடி குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும், இந்தியாவின் சைபர் குற்றங்களுக்கான ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இதுபோன்ற மோசடிகள், போலி இணையதளங்கள், சமூக ஊடக பக்கங்கள், முகநூல் பதிவுகள் மற்றும் கூகுல் போன்ற தேடு தளங்களில் வரும் கட்டண விளம்பரங்கள் மூலம் நடத்தப்படுகிறது. தொழில்முறை தோற்றத்தில் இருக்கும் ஆனால் போலியான இணையதளங்கள், சமூக ஊடக பக்கங்கள் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் பல்வேறு வசதிகளை வழங்குவதன் மூலம் இந்த மோசடிகளில் ஈடுபடுகின்றன.
அவை கேதர்நாத்தில் ஹெலிகாப்டர் முன்பதிவு, சார்தாம் யாத்ரீகர்களுக்கு தங்கும் விடுதிகள் முன்பதிவு செய்தல், ஆன்லைன் கேப் மற்றும் டாக்ஸி முன்பதிவு, விடுமுறை பேக்கேஜ் மற்றும் ஆன்மிக சுற்றுலா போன்றவைகள் அடங்கும்.
இதுகுறித்து தெரியாத நபர்கள் இந்த போர்டல்கள் மூலம் பணம் செலுத்திய பின்பு சேவைக்கான எந்த ஒரு உறுதிப்படுத்துதல் செய்தி வராத நிலையில், விளம்பரங்களில் உள்ள எண்ணை அழைத்து பேசும்போது அவைகளைத் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அப்போது தான் சம்மந்தப்பட்டவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்கிறார்கள். மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பணப்பறிமாற்றம் செய்வதற்கு முன்பு இணையதளத்தின் உண்மைத் தன்மையை பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசு போர்ட்டல்கள் மற்றும் நம்பகமான பயன ஏற்பாட்டாளர்கள் மூலம் மட்டுமே முன்பதிவுகள் குறித்த தகவல்களை சரி பார்க்க வேண்டும்.
மேலும் இதுபோன்ற இணையதளங்கள் பற்றி பொதுமக்கள் உடனடியாக cybercrime.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற எண்ணிலோ புகார் அளிக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.