கொல்கத்தா: நீங்கள் தனித்துவிடப்படவில்லை என்றும் அவ்வாறு உணர வேண்டாம் என்றும் முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் ஆறுதல் தெரிவித்தார்.
வக்பு சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11ம் தேதி மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. அங்குள்ள இந்துக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். பல குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. பலர் அண்டை மாநிலமான ஜார்க்கண்டின் பாகூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தனர். மால்டாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களிலும் ஏராளமானோர் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், முர்ஷிதாபாத்தின் பெட்போனா நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக பெண்களை தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தித்தது. தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் தலைமையிலான இக்குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டனர்.
அவர்கள் மத்தியில் பேசிய விஜயா ரஹத்கர், “துயரமான இந்த தருணத்தில் உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை உங்களுக்குக் கூறவே நாங்கள் இங்கு வந்துள்ளோம். தயவுசெய்து கவலைப்பட வேண்டாம். நாடும் தேசிய மகளிர் ஆணையமும் உங்கள் அனைவருக்கும் பக்கபலமாக இருக்கிறது. நீங்கள் தனித்துவிடப்படவில்லை. அவ்வாறு உணர வேண்டாம். உங்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும்.” என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயா ரஹத்கர், “வன்முறையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சில பெண்கள் தங்கள் கணவரை, சிலர் தங்கள் மகனை இழந்துள்ளனர். வீட்டில் இருந்தவர்களை வெளியே இழுத்துச் சென்று படுகொலை செய்துள்ளனர். இது கொடூரமானது. மேற்கு வங்கத்தில் இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இதையெல்லாம் நாம் முதல்முறையாகப் பார்க்கிறோம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும்.
ஏப்ரல் 11 அன்று நடந்த வன்முறையில் தந்தை-மகன் என இருவரை இழந்த குடும்பத்தினரைச் சந்தித்தேன். மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இப்போது பேச முடியாமல் நான் தவிக்கிறேன். அவர்களின் வலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். மாவட்டத்தின் சில பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையின் நிரந்தர முகாம்களை அமைக்க வேண்டும் என்றும், மூன்று உயிர்களைக் கொன்ற வகுப்புவாத மோதல்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்கள். நாங்கள் நிலைமையை ஆய்வு செய்தோம். இது தொடர்பான அறிக்கையை நாங்கள் மத்திய அரசுக்கு சமர்ப்பிப்போம்” என தெரிவித்தார்.
முர்ஷிதாபாத் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க பாஜக எம்எல்ஏ ஸ்ரீரூப மித்ரா சவுத்ரி, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இங்கு வரவில்லை. அவர்தான் மாநில உள்துறை அமைச்சராகவும் உள்ளார். அவர் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார்.
இங்குள்ள மக்களின் ஒரே கோரிக்கை எல்லை பாதுகாப்புப் படையின் நிரந்தர முகாம்தான். மேலும், நடந்த இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணையை அவர்கள் கோருகிறார்கள். அவர்கள் மாநில அரசின் சட்டம் ஒழுங்கை நம்பவில்லை. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பயப்படுகிறார்கள்.
மம்தா பானர்ஜி அரசாங்கத்தால் சில பயங்கரவாதக் குழுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவர்கள் பெண்களைத் தாக்கியுள்ளனர். அவர்களிடம் கத்திகள் இருப்பதாக மிரட்டி, ‘அல்லாஹு அக்பர் என்று சொல்லுங்கள், அப்போதுதான் நீங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்’ என்றார்கள். இந்த மாதிரியான வார்த்தைகளை நான் கடந்த காலத்தில் கேள்விப்பட்டதே இல்லை.
நான் இங்கு பணியாற்றிய 12 ஆண்டுகளில், இந்த மாதிரியான இந்து முஸ்லிம் ஒற்றுமையின்மையை நான் பார்த்ததில்லை. மக்கள் இங்கு வேலை செய்கிறார்கள். அவர்கள் துர்கா பூஜை மற்றும் ஈத் கொண்டாடுகிறார்கள். இந்த வன்முறைக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். இவர்கள் உள்ளூர் முஸ்லிம் சகோதரர்கள் அல்ல. பயங்கரவாத ஆதரவு குழுக்கள் 12 முதல் 14 வயது வரையிலான உள்ளூர் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தியுள்ளன. அவர்கள் பணத்துக்காக மட்டுமே இதைச் செய்துள்ளனர். நாம் இதை நம் நாட்டில் அனுமதிக்க முடியாது.” என தெரிவித்தார்.