ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாகப் பதிவானது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லைப்பகுதியில் 86 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று பகல் 12.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டது. இதனால் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன. வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்து உருண்டன. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறி சாலையில் ஓடி வந்து நின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. ஜம்மு-காஷ்மீர், ஹரியானா, பஞ்சாப், டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணர்பட்டது. இதையடுத்து மக்கள் பீதியடைந்து கட்டிடங்கள் விட்டு வெளியே ஓடி வந்தனர்.
முன்னதாக கடந்த புதன்கிழமையன்றும் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இது ரிக்டரில் 5.9 அலகுகளாகப் பதிவானது. டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் அப்போது நில அதிர்வு உணரப்பட்டது.