நில பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருவாய் அதிகாரிகள் கிராமங்களுக்கே செல்வார்கள்: தெலங்கானா அமைச்சர்

ஹைதராபாத்: விவசாயிகள் எதிர்கொள்ளும் நிலம் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, மே 1 முதல் வருவாய் அதிகாரிகள் கிராமங்களுக்குச் சென்று மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று தெலங்கானா வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீனிவாச ரெட்டி தெரிவித்துள்ளார்.

நில உரிமை பதிவுச் சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காட்வால் மாவட்டத்தின் தரூர் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வருவாய்த்துறை அமைச்சர் பொங்குலேட்டி ஸ்ரீனிவாச ரெட்டி, “வெற்று காகிதத்தில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் மாற்றப்பட்ட நிலங்கள் தொடர்பாக சுமார் 26,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தரூர் உட்பட நான்கு மண்டலங்களில் நில உரிமை தொடர்பான இணையதளம், ஒரு முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. நிலப் பதிவேடுகளில் உள்ள பெயர்கள், சர்வே எண்கள், நிலத்தின் அளவு ஆகியவற்றில் உள்ள பிழைகளைச் சரிசெய்ய மக்கள் முன்பு மிகப் பெரிய துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படும். மக்களுக்கு ஆதார் அட்டையைப் போலவே பூதார் அட்டைகளும் (நில உரிமை அட்டைகள்) வழங்கப்படும்.

வாங்கவோ விற்கவோ முடியாத தடைசெய்யப்பட்ட நிலங்கள் 18 லட்சம் ஏக்கர் உள்ளன. இதில், ஆறு லட்சம் முதல் ஏழு லட்சம் ஏக்கர் வரையிலானவை விவசாய நிலங்கள். இவை தொடர்பான பிரச்சினைகள் நில உரிமை பதிவுச் சட்டத்தின் மூலம் தீர்க்கப்படும்.” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.