MI vs CSK Playing XI Prediction: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் (IPL 2025) தற்போது அதன் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது எனலாம். அதாவது அனைத்து அணிகளும் குறைந்தபட்சம் தலா ஏழு போட்டிகளை விளையாடிவிட்டன. லக்னோ மற்று்ம் ராஜஸ்தான் அணிகள் மட்டுமே தலா 8 போட்டிகளை விளையாடி இருக்கின்றன.
IPL 2025: இன்று 2 லீக் போட்டிகள்
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப். 20) இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. பஞ்சாப் நியூ சண்டிகர் நகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. இப்போட்டி மாலை 3:30 மணிக்கு தொடங்கும். இதையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத இருக்கிறது. வழக்கம்போல் மும்பை – சிஎஸ்கே போட்டிக்கு (MI vs CSK) பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
MI vs CSK: பெரிய நம்பிக்கையுடன் வரும் மும்பை
மும்பை அணி ஏழு போட்டியிலே விளையாடி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, 6 புள்ளிகள் உடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கே அணி (Chennai Super Kings) ஏழு போட்டிகளில் இரண்டில் மட்டும் வென்று நான்கு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. மும்பை அணி (Mumbai Indians) தனது கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளை வீழ்த்தி பெரு நம்பிக்கையுடன் இந்த போட்டிக்கு வருகிறது. மறுபுறம் சிஎஸ்கே அணியோ லக்னோ அணியை வென்று ஓரளவு நம்பிக்கையுடன் மும்பையை எதிர் கொள்ள இருக்கிறது.
மும்பை அணியின் பிளேயிங் லெவனில் இன்று பெரிய அளவில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. கரன் சர்மாவுக்கு கடந்த போட்டியில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் விக்னேஷ் புத்தூரை பிளேயிங் லெவனில் சேர்க்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி இன்னும் அதன் காம்பினேஷனை முழுமையாக கண்டறியவில்லை என்பதால் இன்றைய போட்டியில் பல்வேறு மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
MI vs CSK: ஆயுஷ் மாத்ரேவுக்கு அதிக வாய்ப்பு?
கடந்த போட்டி போல் இன்றும் ஷேக் ரஷீத் – ரச்சின் ரவீந்திரா ஜோடி தான் ஓப்பனிங் இறங்கும். அதே நிலையில் நம்பர் 3 இடத்தில் ஆயுஷ் மாத்ரே களம் இறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஃபிளமிங், பேட்டிங் பயிற்சியாளர் மைக்கெல் ஹசி உள்ளிட்டோர் வலைப்பயிற்சியின் போது ஆயுஷ் மாத்ரே (Ayush Mhatre) உடன் அதிக நேரம் செலவிட்டு வந்ததை பார்க்க முடிந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அவர் ஏற்கனவே தோனி (MS Dhoni) மற்றும் பயிற்சியாளர்களின் கவனத்தை கவர்ந்ததால் தான் உடனடியாக காயமடைந்த ருத்ராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் மும்பையைச் சேர்ந்தவர் என்பதால் இன்றைய போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு கொடுத்தால், அவரது நம்பிக்கை பலமாகவும் வாய்ப்புள்ளது.
MI vs CSK: இன்று விளையாடுவாரா பிரேவிஸ்?
அதேபோல் சிவம் தூபேவுக்கு பின்னர் டிவால்ட் பிரேவிஸ் (Dewald Brevis) களமிறக்கப்படலாம். அவர் நேற்று தான் அணியுடன் இணைந்தார் என்றாலும் அவரை உடனடியாக களமிறக்க சிஎஸ்கே அணி முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரவிஸை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வைப்பது குறித்து விரைவில் முடிவு எடுப்போம் என ஸ்டீபன் ஃபிளமிங் நேற்று (ஏப். 19) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
பிரேவிஸிற்கு மும்பை வான்கடே மைதானத்தில் அதிக அனுபவம் இருப்பதாலும், தென்னாப்பிரிக்கா உள்ளூர் தொடர்களில் நல்ல ஃபார்மில் இருப்பதாலும் அவரை நிச்சயம் இன்றைய போட்டியிலேயே சிஎஸ்கே சேர்க்க நினைக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. இன்றைய போட்டியில் ராகுல் திரிப்பாதி மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் நீக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுவரை சிஎஸ்கே அணி அதன் 19 வீரர்களை விளையாட வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
MI vs CSK: பிளேயிங் லெவன் கணிப்பு
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கில்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சஹார், ஜஸ்பிரித் பும்ரா, டிரென்ட் போல்ட். இம்பாக்ட் வீரர்: விக்னேஷ் புத்தூர்
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, ஷேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, ஷிவம் தூபே, டிவால்ட் பிரேவிஸ், விஜய் சங்கர், எம்எஸ் தோனி, ஜடேஜா, அன்ஷூல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது. இம்பாக்ட் வீரர்: மதீஷா பதிரானா