சென்னை: தன்னை வைகோவின் சேனாதிபதி என கூறியுள்ளார் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தத்தின் உச்சக் கட்டமாக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து தாமாகவே விலகி இருக்கிறார் துரை வைகோ. கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) நடைபெறும் நிலையில் தனது சமூக வலைதள பதிவில் மல்லை சத்யா வெளியிட்ட குறிப்பு:
“இனியத் தோழமைகளே, இலங்கை அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையை கண்டு தான் ராமனின் தூதுவன் என்பதற்கு சாட்சியாக ராமன் சீதை திருமணத்தின்போது அணிவித்த மோதிரத்தை காட்டி தன் நிலையை உறுதிப் படுத்துவான் சொல்லின் செல்வன் அனுமன்.
அதைப் போன்றே நான் தலைவர் வைகோவின் சேனாதிபதி என்பதற்கு அடையாளம் என் மோதிர விரலில் தலைவர் வைகோ எம்.பி முகம் பதித்த மோதிரம், சட்டைப் பாக்கெட்டில் அவரின் புகைப்படம் இதுதான் என் அடையாளம்” என்று கூறியுள்ளார். ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதில் குறிப்பிட்டுள்ளார்.
‘மல்லையா சத்யா மட்டுமல்ல எல்லோரும் வைகோவின் சேனாதிபதிகள் தான்’ என இதற்கு துரை வைகோ எதிர்வினை ஆற்றியுள்ளார்.