திருமலை சாலைகளில் குப்பைகள் போடுவதை பக்தர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி கேட்டுக்கொண்டார்.
‘தூய்மை ஆந்திரா – தூய்மை திருமலை’ எனும் திட்டத்தின் கீழ் நேற்று திருமலை முழுவதும் 8 குழுக்களாக பிரிந்து தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் திருமலையில் முதல் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.
அப்போது வெங்கய்ய சவுத்ரி கூறியதாவது: திருமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் பக்தர்கள் இவற்றை கொண்டு வந்து, பயன்படுத்திய பிறகு ஆங்காங்கே சாலைகளில் வீசிவிடுகின்றனர். இதனால் திருமலையில் நாளுக்கு நாள் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகிறது. சுற்றுசூழலும் பாதிக்கப்படுகிறது.
எனவே பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். குப்பைகளை சாலைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். திருமலையில் தினமும் 6,000 துப்புரவு தொழிலாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கோசாலையில் ஆய்வு: திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு நேற்று தேவஸ்தான கோசாலையில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த கோசாலையில் முன்னாள் இயக்குநர் ஹரிநாத் ரெட்டி பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இங்குள்ள மாடுகளை ஓங்கோலுக்கு விற்றுள்ளார். தீவனங்களை அதிகம் வாங்கியதாக தவறான கணக்கு காட்டியுள்ளார். இதனை கடந்த ஆட்சியினர் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.
கோசாலை பிரச்சினைகளை ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தங்கள் தவறுகளை எங்ள் மீது போட ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் முயன்று வருகின்றனர். தவறிழைத்தவர்கள் தப்பிக்க முடியாது. முன்னாள் இயக்குநர் ஹரிநாத் ரெட்டி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.