உலகநாயகன் கமல்ஹாசன் போல் பல மேடைகளில் நகல் நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வருபவர்தான் கதிர் கமல். நடிகர் கமல்ஹாசன் போலவே உருவத்தைக் கொண்டிருக்கும் இவர், அந்த உருவத்திற்காகவே தன்னுடைய வாழ்நாளையும் அர்ப்பணித்துள்ளார்.
அவரைப் போலவே தோற்றம் கொண்டிருந்தாலும், அவரைப் போன்ற குரல் எனக்கு இல்லை என்று வருத்தப்படுகிறார் கதிர்.

அவருடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? எப்போது அவர் கமல்ஹாசன் போல் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்? எந்தெந்த படங்களில் இதுவரை நடித்துள்ளார்?
அவர் வாழ்க்கையில் நடந்த கஷ்டங்கள் என்னென்ன? போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ள அவரை நேரில் சந்திக்க ஈரோடு பகுதிக்கு விரைந்தோம்.
பேசத் தொடங்கிய அவர், “நான் என்னுடைய 15 வயதிற்கு மேல் தான் கமல்ஹாசன் போலவே இருப்பதாக நினைத்தேன். ‘வெற்றி விழா’, ‘புன்னகை மன்னன்’ திரைப்படங்கள் வெளிவந்த சமயத்தில் எனக்கு அரும்பு மீசைதான் இருந்தது. அப்போது தான் நான் கமல்ஹாசன் போலவே இருப்பதாக எனக்குத் தோன்றியது.
அந்தத் திரைப்படங்கள் வெளியான சமயத்திலேயே எனக்குக் கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும். அணு அணுவாக அவரை நான் ரசிக்க ஆரம்பித்தேன். கமல்ஹாசன்போல் 32 வருடங்களாக ஸ்டேஜ்களில் நடனமாடி வருகிறேன். என்னை அறியாமலேயே கமல்ஹாசனை நான் உள்வாங்கிக் கொண்டேன்.

நமக்கு ஒருவரைப் பிடித்திருக்கிறது என்றால், அவர் செய்வதைப் போலவே நாமும் எளிதாகச் செய்வோம். என்னுடைய சிறு வயதிலிருந்தே அவரைப் போலவே கண்ணாடி முன்பு நின்று செய்து பார்ப்பது, பேசுவது, நடப்பது உள்ளிட்டவற்றை நான் செய்வேன். என்னுடைய ஈடுபாடு மற்றும் நான் அவரை ரசித்த விதத்தின் காரணமாகவே நான் எளிதாக அவரைப்போல நடந்துகொள்ள முடிகிறது.
ஒரு சிலர் என்னைப் பார்த்து, ‘கமல் மாதிரியே பேசுகிறான், கமல் மாதிரியே நடக்கிறான்’ என்றெல்லாம் சொல்லுவார்கள். மேக்கப், கெட்டப் எல்லாம் போட்டு பார்த்த பிறகு, ஒரு சிலர் என்னைத் திட்டியும் இருக்கிறார்கள்.
அவர் திரைப்படங்களில் மீசை எடுத்துவிட்டு நடிப்பார். எனக்கு மீசையே வளர்ந்திருக்காது; இருந்தாலும், நானும் ஒரு முறை மீசை எடுத்துவிட்டு நடித்துப் பார்த்தேன். கமல்ஹாசன் என்றாலே ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கெட்டப் மாற்றம் இருந்துகொண்டே இருக்கும். அதுதான் உலகநாயகன் கமல்ஹாசனின் திறமை.
ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஹேர் ஸ்டைல், மீசை, தாடி இவை எல்லாம் மாற்றும்போது தான் ஒவ்வொரு திரைப்படத்திற்கு ஏற்ப அவருடைய கெட்டப்பை கொண்டு வர முடியும். நான் என்னுடைய தலைமுடியைப் பராமரிப்பதற்காக, வருடத்திற்கு ஒரு முறை மொட்டை அடிப்பேன்.

என்னுடைய ஹேர் ஸ்டைல் பார்த்துவிட்டு, நிறைய பேர் இது ஒரிஜினலா அல்லது விக் தானா என்று என்னுடைய தலைமுடியை இழுத்துப் பார்ப்பார்கள். நான் என்னுடைய டான்ஸ் பர்ஃபார்மன்ஸுக்கு முன்பு, தொடர்ந்து சீப்பைக் கொண்டு என்னுடைய தலைமுடியை வாரிக்கொண்டே இருப்பேன்.
நான் தலைமுடியை வாரிக் கொண்டிருப்பதைப் பார்த்து, என்னிடம் உள்ள சீப்பை வாங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு நான் சீப்பைக்கொண்டு தலை வாருவேன்.
எனக்கு அவ்வளவாக மேக்கப் போட வராது. இருந்தாலும், முடிந்த அளவிற்கு எனக்குத் தெரிந்த அளவிற்கு நான் மேக்கப் போடுவேன். பெரும்பாலானோர், ‘உண்மையாக மேக்கப் போட்டால், நீ அச்சு அசலாக கமல் சார் மாதிரி தான் இருப்பாய்’ என்று சொல்வார்கள்.
‘கமல் சாரே மேக்கப் போட்டுக்கொண்டு தான் படத்தில் நடிக்கிறார். நீ மேக்கப் போடாமலே கமல் மாதிரி வருகிறாய்’ என்று சொல்வார்கள்.

‘உலகநாயகன் மாதிரி இருக்கிறாய்’ என்று சொல்வது தான் எனக்கு மிகப் பெரிய கௌரவம்.
கமல் சார் மாதிரியே சிரிப்பது, அழுவது, நடப்பது என எல்லாமே எனக்கு சிறு வயதிலிருந்தே வரும். அதனைத் தான் நான் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்,” என அமைதியாகப் பேசி, மீண்டும் தொடர்ந்தார்.
“18 வயதில் நான் மேடை ஏறி டான்ஸ் ஆடும்போது, எங்கள் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை. நான் ஸ்டேஜ் ஏறக்கூடாது என்று சொன்னார்கள். முதலில் எங்கள் வீட்டில் பயந்தார்கள். இப்போதெல்லாம் கொரோனா லாக்டவுன் பிறகு, நிகழ்ச்சிகள் எல்லாம் இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடக்கிறது.
ஆனால், முன்பு எல்லாம் நிகழ்ச்சிகள் இரவு 11 மணிக்குத் தான் தொடங்கும். மூன்று மணிக்குத் தான் முடியும். அதன் பிறகு நான் வீட்டுக்கு வந்து தூங்கிவிடுவேன்.

எழுந்து பள்ளிக்கும் செல்ல முடியாது, வேலைக்கும் செல்ல முடியாது. அதனால், என்னை அப்பா, அம்மா அடித்தார்கள். ஈரோட்டில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நான் டான்ஸ் ஆடும்போது தான் முதன் முதலில் என்னுடைய குடும்பத்தினர் வந்திருந்தனர்.
ஆடியன்ஸ் எல்லோரும் அன்று கைதட்டினார்கள். அதனைப் பார்த்துவிட்டு, ‘பரவாயில்லை, நம் மகன் நடனம் ஆடியதற்கு எல்லோரும் கைதட்டுகிறார்கள்’ என்று நினைத்தார்கள்,” என்றார்.
கதிர் கமல், கமல்ஹாசனுக்கு சில திரைப்படங்களில் டூப் ரோல்களில் நடித்திருக்கிறார். “கமல் சாருக்கு டூப் ரோலில் கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களில் நான் நடித்திருக்கிறேன். பொது நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்களில் வருவது போன்ற காட்சிகள் எல்லாம் நான் கமல் சார் போல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.
கமல் சார் லுக் ஒரு சில திரைப்படங்களில் தேவைப்படும். அந்த மாதிரி திரைப்படங்களில் எங்களைப் போன்ற லுக்-லைக் ஆர்ட்டிஸ்ட்கள் தேவைப்படுவார்கள். அப்படி நான் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளேன்.

இப்போது லேட்டஸ்டாக வந்த பிரபு தேவாவின் ‘குலேபகாவலி’ திரைப்படத்தில், ஒரு படம் முழுவதும் நான் மொட்டை ராஜேந்திரனுடன் நடித்துள்ளேன். அதற்கு மிகப் பெரிய நன்றிகளை நான் சொல்லியாக வேண்டும்.
நட்டி நடராஜ் சார் அவர்களின் டைரக்ஷனில் வெளிவந்த ‘என்கிட்ட மோதாதே’ திரைப்படத்தில், ஒரே நேரத்தில் ரஜினி மற்றும் கமல் திரைப்படம் வெளியாவது போன்ற ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில் நான் கமல் போல நடித்திருப்பேன். என்னுடைய நண்பர் ரஜினி செந்தில் நடித்திருப்பார். அதில் ஒரு பாடல் முழுவதும் நான் நடித்திருப்பேன்.
கமல் சார் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் வந்திருந்தது. அந்தத் திரைப்படத்திற்காக இரண்டு நாட்கள் நான் ஷூட்டிங்கில் நடித்துள்ளேன். அந்தத் திரைப்படத்தில், கமல் சார் பெரிய மிஷின் கன் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து சுடுவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் ‘ஏஜென்ட் விக்ரம்’ என்று வரும்.
அப்போது 80ஸ் கமலின் ஃபேஸ் வந்து செல்லும். அது சிஜி வொர்க் ஆக இருந்தாலும், அது என்னுடைய ஃபேஸை வைத்துத் தான் செய்ததாகச் சொன்னார்கள். நானும் அதை அவ்வளவாக யாரிடமும் வெளியில் சொல்லவில்லை.

அந்த நேரத்தில் லோகேஷ் கனகராஜைப் பார்க்க வாய்ப்பு வரவில்லை. அதேபோல, கமல்ஹாசனையும் பார்க்க வாய்ப்பு வரவில்லை. அதன் பிறகு, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து எனக்கு சம்பளத்திற்கான காசோலையை அனுப்பினார்கள். அதுதான் என்னுடைய வாழ்வில் மிகப் பெரிய தருணமாக நான் பார்க்கிறேன்.
ஏனென்றால், கிட்டத்தட்ட 32 வருடங்களாக கமல் மாதிரியே மேடைகளில் நடித்துக் கொண்டிருந்த எனக்கு, கமல் சார் நிறுவனத்தில் இருந்து ஒரு சம்பளம் கிடைத்ததில் பெரிய மகிழ்ச்சி.
‘விக்ரம்’ திரைப்படத்திற்குப் பிறகு, ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் ‘நாயகன்’ கெட்டப் போன்று வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கான ஆடிஷனுக்கும் நான் சென்றிருந்தேன். என்னுடைய விவரங்கள் எல்லாம் குறித்துக் கொண்டார்கள்.
கமல் சாரிடம் இதுவரை தனிப்பட்ட முறையில் பேசுவதற்கான வாய்ப்பு அமையவில்லை. பேசினால், அவர் ஒன்று, ‘ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய்?’ என்று திட்ட வேண்டும், அல்லது ‘சிறப்பாகச் செய்கிறாய்’ என்று பாராட்ட வேண்டும். ” என்றார்.

மேலும், தன் குடும்பத்தைப் பற்றிப் பேசிய அவர், “என் மனைவி என் அக்கா மகள்தான். நான் சிறு வயதிலிருந்தே அவளை எடுத்து வளர்த்திருக்கிறேன். அவள் என்னுடைய ரசிகை. அவளுக்கு நான் என்றால் மிகவும் பிடிக்கும்.
சினிமா ஃபீல்டில் இருப்பவர்களுக்குத் திருமணம் என்பது பெரிய தடையாக இருக்கும். அதேபோலத் தான் எனக்கும் இருந்தது. நானும் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்திக் கொண்டே இருந்தேன். நான் ஏதாவது சாதித்துவிட்டுத் தான் திருமணம் செய்ய வேண்டும் எனத் தாமதித்தேன்.
அப்போது எல்லாம் எங்கள் வீட்டில் லேண்ட் லைன் ஃபோன் இருக்கும். அவள் ஒரு ரூபாய் காயின் ஃபோனில் இருந்து எங்கள் வீட்டிற்கு ஃபோன் செய்வாள். நான் ஃபோன் எடுத்தால் மட்டுமே பேசுவாள்.
எங்கள் வீட்டில் யாரேனும் ஃபோன் எடுத்தால் பேசமாட்டாள். அப்போது தான், பல ஊர்களில் ஸ்டேஜ்களில் ஆடும் எனக்கு ஒரு கல்யாணம் செய்ய வேண்டும் என என்னுடைய பெற்றோர்கள் முடிவு எடுத்தார்கள்.

அதேபோல, என் அக்கா மகள் வீட்டிலும், மூத்த பெண் அவள் தான் என்பதால், அவளுக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். அவள் திருப்பரங்குன்றம் வந்திருந்தாள்.
நானும் திருப்பரங்குன்றம் சென்றிருந்தேன். அங்கே கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்,” எனப் புன்னகைக்கிறார்.