புதுடெல்லி,
சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய சுப்ரீம்கோர்ட்டு, மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில் நீதித்துறை மீது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். அதேபோல, பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை சாடி இருந்தனர். சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் நாடாளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து இருந்தன.
இந்த சூழலில் பாஜக எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அதை காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில், “சுப்ரீம்கோர்ட்டு மற்றும் நீதிபதிகளை விமர்சித்து பா.ஜ.க.வை சேர்ந்த 2 எம்.பி-க்கள் கருத்து கூறினர். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியுள்ளார். வெறுப்பு பேச்சு என்று எடுத்துக் கொண்டால் இந்த இரண்டு எம்.பி-க்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகின்றனர். சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நட்டாவின் கருத்து வெறும் டேமேஜ் கன்ட்ரோல் தான்.
சுப்ரீம்கோர்டு மற்றும் நீதிபதிகள் குறித்து சொந்த கட்சி எம்.பி-க்கள் கருத்து குறித்து மவுனம் காத்து வருகிறார் நட்டா. அது குறித்து அவர் என்ன சொல்ல நினைக்கிறார்? அதை பா.ஜ.க. ஏற்கிறதா? அந்த இரண்டு எம்.பி-க்களுக்கும் தொடர்ந்து அரசியலமைப்பை விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு இல்லையெனில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அவர்கள் இருவருக்கும் விளக்கம் கேட்டு நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளாரா?” என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.