அவுரங்கசீப்பை மதவெறியர், கொடுங்கோல் ஆட்சியாளர் என்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவே கூறியுள்ளார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் சாம்பாஜிநகரில் நேற்று முன்தினம் மேவார் மகாராஜா மகாராண பிரதாப் சிங்கின் முழு உருவ சிலையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்துவைத்தார்.
அப்போது விழாவில் அவர் பேசியதாவது: மகாராண பிரதாப், சத்ரபதி சிவாஜி ஆகியோர்தான் தேசத்தின் உண்மையான ஹீரோக்கள். முகலாய பேரரசர் அவுரங்கசீப் அல்ல. துணிச்சல் மற்றும் தேசபக்தியின் உருவகமாக இருந்தார் மகாராணா பிரதாப். கொரில்லா போர் தந்திரங்களுக்கு மகாராணா பிரதாப்பிடமிருந்து உத்வேகம் பெற்றார் சத்ரபதி சிவாஜி.
சுதந்திரத்துக்குப் பிறகு ராணா பிரதாப், சிவாஜி மகராஜ் ஆகியோருக்கு போதிய முக்கியத்துவத்தையோ, உண்மையான சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்ற பெயரையோ யாரும் வழங்கவில்லை.
ஆனால், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்தனர். ஆனால், அதே நேரத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு, அவுரங்கசீப் குறித்து தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அவுரங்கசீப் ஒரு மதவெறியர், கொடுங்கோல் ஆட்சியாளர் என்று நேருவே தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
அவுரங்கசீப்பை போன்றவர்கள் நிச்சயம் ஹீரோக்களாக இருக்க முடியாது. அவரது காலத்தில் தாரா ஷிகோ என்பவர் உபநிஷதங்களை மொழிபெயர்த்தார். ஆனால், அவரை கொன்றுவிட்டார் அவுரங்கசீப், அனைத்து மதங்களையும் மதித்தவர்தான் தாரா ஷிகோ.
மகாராணா பிரதாப்பும், சிவாஜி மகராஜும் முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை. ஆதிவாசிகளும், முஸ்லிம்களும் மகாராணா பிரதாப்பின் போர்ப் படைகளில் இருந்தனர். முகலாயப் படைகளுக்கு எதிராக போராடி உயிர்நீத்தவர் ஹகீம் கான் சுரி என்ற முஸ்லிம். மேலும் மதரி என்ற முஸ்லிம் இளைஞர், சிவாஜி மகராஜின் பாதுகாவலராக இருந்தார். இது வரலாற்று உண்மை.
மகாராணா பிரதாப்பையும், சிவாஜி மகராஜையும் புத்தகங்களோடு நிறுத்திக் கொள்வது கூடாது. அவர்களது உயர்ந்த பண்பை, வீரத்தை நமது குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டும். அவர்கள் வாழ்க்கையை உத்வேகத்தோடு வாழ்வதற்கான ஆதாரங்கள் என்பதை நமது இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.