'இணைந்த கரங்களாக வைகோவுக்கும், கட்சிக்கும் துணையாக செயல்படுவோம்' – மல்லை சத்யா  

சென்னை: “நானும், துரை வைகோவும் இணைந்த கரங்களாக வைகோவுக்கும், கட்சிக்கும் துணையாக செயல்படுவோம். மதிமுகவை கட்டிக் காப்போம்.” என்று மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

மதிமுக துணைப் பொதுச்​செய​லாளர் மல்லை சத்யா​வுக்கும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவுக்கும் இடையில் நடக்கும் அரசியல் அதிகார யுத்தம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள சூழலில் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (ஏப்ரல் 20) நடைபெற்றது.

மதிமுக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை, எழும்பூரில் உள்ள தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து கூட்டம் மாலை வரை நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மல்லை சத்யாவும், துரை வைகோவும் மனம்விட்டுப் பேசிக் கொண்டதாகவும், அதன் அடிப்படையில் மல்லை சத்யா – துரை வைகோ இருவரும் சமாதானம் அடைந்து கட்சிக்காக இணைந்து செயல்பட உறுதியளித்துள்ளதாகவும் கூறினார். மேலும், துரை வைகோவின் விலகல் ஏற்கப்படவில்லை. அவர் அப்பதவியில் நீடிக்கிறார் என்றும் கூறினார்.

இந்நிலையில், மல்லை சத்யா வெளியிட்ட அறிக்கையில், “சமூக ஊடகங்களில் வந்த பதிவுகளால் கழகத்தில் கசப்புணர்வு ஏற்படுகின்ற நிலையும், அதனால் மதிமுகவின் கட்டுப்பாட்டுக்கு ஊறு நேருகின்ற நிலையும் ஏற்பட்டதற்கு இன்று கழக நிர்வாகக் குழுவில் எனது மனப்பூர்வமான வருத்தத்தை என் உயிர் தலைவரிடமும், நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் தெரிவித்துக் கொண்டேன். இது போன்ற சூழல் இனி எதிர்காலத்தில் நிகழாது.

தலைவருக்கும், கழகத்தின் எதிர்காலம் முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோவுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்று நான் உறுதி அளித்தேன்.

இதனை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு சகோதரர் துரை வைகோ முதன்மைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவேன் என்று நிர்வாகக் குழுவில் அறிவித்தது எனக்கும், கழகத் தோழர்களுக்கும் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நானும், முதன்மைச் செயலாளர் சகோதரர் துரை வைகோவும் இணைந்த கரங்களாக தலைவர் வைகோவுக்கும், கழகத்துக்கும் துணையாக செயல்படுவோம். கழகத்தைக் கட்டிக் காப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மதிமுக வலிவுடன் தழைத்தோங்கி நிற்க பணியாற்றுவோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >> ​முடிந்தால் நீக்கிப் பார்..! – மல்லை சத்யா Vs துரை வைகோ

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.