‘சென்னை தோல்வி!’
வான்கடேவில் நடந்த மும்பைக்கு எதிரான போட்டியை சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இழந்திருக்கிறது. நடப்பு சீசனில் சென்னை அணியின் 6 வது தோல்வி இது. போட்டிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி தோல்வி குறித்து சில முக்கியமான விஷயங்களை பேசியிருந்தார்.

‘காரணம் சொல்லும் தோனி!’
தோனி பேசியதாவது, ‘நாங்கள் இன்றைக்கு வெற்றிக்குத் தேவையான ரன்களை அடித்திருக்கவில்லை. பௌலிங்கின்போது காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கும் எனத் தெரிந்தது. அதை மனதில் வைத்து நாங்கள் இன்னும் நன்றாக ஆடியிருக்க வேண்டும். பும்ரா இப்போதைக்கு உலகிலேயே தலைசிறந்த டெத் பௌலர்களில் ஒருவர். மும்பை அணி கொஞ்சம் சீக்கிரமே டெத் பௌலிங்கை ஆரம்பித்துவிட்டது.
நாங்களும் இன்னும் சீக்கிரமாக பெரிய ஷாட்களை ஆட ஆரம்பித்திருக்க வேண்டும். ஆயுஷ் மாத்ரே நன்றாக ஆடுகிறார். நாங்களும் அவர் ஆடுவதை அவ்வளவாக பார்த்ததில்லை. இப்படி ஒரு வீரர் எங்களுக்கு தேவை. மும்பையின் பேட்டர்கள் ஸ்பின்னை மிகச்சிறப்பாக எதிர்கொண்டார்கள்.

முதல் 6 ஓவர்களில் அதிக ரன்களை கொடுத்துவிட்டால், அதிலிருந்து மீள்வது கடினம். கடந்த காலங்களில் நாங்கள் நன்றாக கிரிக்கெட் ஆடினோம். அதனால் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிப்பெற்றோம். ஒவ்வொரு போட்டியாகத்தான் அணுகப்போகிறோம். பிரச்னைகளை சரி செய்யும் வழியை பார்க்க வேண்டும்.
ஒருவேளை நாங்கள் ப்ளே ஆப்ஸூக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தால், சரியான காம்பீனேஷனை கண்டடையும் வேலையில் இறங்க வேண்டும். இந்த மாதிரியான சமயங்களில் உணர்ச்சிவசப்படக்கூடாது. யதார்த்தத்தைதான் யோசிக்க வேண்டும். அடுத்த சீசனில் கம்பேக் கொடுப்பதற்கான பணியைத் தொடங்க வேண்டும்.’ என்றார்.