சென்னை: தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் உயிர்ப்பு பெருவிழா சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்றன.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் 40 நாள் தவக்காலம் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டது. பின்னர், பெரிய வியாழன், புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக அவர் பட்ட பாடுகளை எடுத்துக் கூறும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப் பாதை பவனி நடைபெற்றது. இதையடுத்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு உயிர்த்தெழுந்த 3-வது நாளை உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகையாகக் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் நேற்று ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள், ஜெபங்கள் நடைபெற்றன. பின்னர், இயேசு உயிர்தெழுந்த நிகழ்வு தேவாலயத்தில் அரங்கேற்றப்பட்டது. அந்த நிகழ்வை வாணவேடிக்கைகளுடன் கிறிஸ்தவர்கள் வரவேற்றனர்.
பின்னர், திருப்பலியில் பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையிலான பாதிரியார்கள், கிறிஸ்தவர்கள் மீது தெளித்து அருளாசி வழங்கினர்.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதேபோல், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கன்னி தேவாலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம், மயிலாப்பூரில் உள்ள லஸ் தேவாலயம், பரங்கிமலையில் உள்ள புனித தோமையார் மலை தேவாலயம், சின்னமலை ஆரோக்கிய அன்னை திருத்தலம் என சென்னை மற்றும் புறநகர் உட்படத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன.
பல தேவாலயங்களில் இயேசு உயிர்த்தெழுதல் லேசர் விளக்குகளாலும், நாடகங்களாலும் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டன. பின்னர் 12 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் பட்டாசுகளை வெடித்தும், கேக்குகளை பரிமாறியும் இயேசு உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள் கொண்டாடினர்.
ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஆளுநர், முதல்வர், அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: அன்பு, நீதி, மன்னித்தல் பற்றிய செய்தியை வழங்கிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகளில் இருந்து நாம் பலம் பெறுவோம். உள்ளடக்கிய மற்றும் சமத்துவத்தில் வேரூன்றிய எதிர்காலத்தை உருவாக்க அவர் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். அனைவருக்கும் இணக்கமான சமூகத்தை வளர்க்கவும், இரக்கம் மற்றும் சமத்துவத்தில் ஊன்றிப்போகும் பாரதத்தை உருவாக்கவும் நான் ஒன்றாக பாடுபடுவோம்.
முதல்வர் ஸ்டாலின்: அமைதி, பொறுமை, இரக்கம், இன்னா செய்தாருக்கும் நன்மையே செய்யும் நற்குணம் ஆகியவற்றின் பேருருவமான இயேசு பிரானின் வழியைப் பின்பற்றி நடக்கும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனும் உயிர்ப்பு ஞாயிறு நாள் வாழ்த்துக்கள். உலகெங்கும் வெறுப்பும், வன்முறையும் நீங்கி நல்லிணக்கம் செழித்திட இயேசு பெருமகனாரின் போதனைகள் வழிகாட்டட்டும். அன்பே வெல்லட்டும், உலகை ஆளட்டும்.
எதிர்கட்சி தலைவர் பழனிசாமி: எத்தனை தடைகள் வரினும், இறுதியில் உண்மை வழியும், அன்பின் நெறியுமே வெல்லும் என்பதே இத்திருநாள் நமக்கு உணர்த்தும் மகத்தான செய்தி. அன்பின் திருவுருவான இயேசுபிரான் நமக்கு போதித்த உயரிய விழுமியங்களைப் பின்பற்றி நாம் அனைவரும் வாழ்ந்திடவும், உலகெங்கும் சகோதரத்துவம், சமத்துவம், மனிதநேயம் தழைத்தோங்கிடவும் வாழ்த்துகிறேன்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: இயேசு பிரான் உயிர்த்தெழுந்த திருநாளைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சொந்தங்களுக்கும் எனது ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இயேசு கிறிஸ்துவின் போதனைகளை அனைவரும் பின்பற்றுவோம், அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவோம், நாட்டில் சமூக நீதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தழைத்து, மகிழ்ச்சி பெருக இந்நாளில் உறுதியேற்போம்.
தவெக தலைவர் விஜய்: அன்பு, கருணை, மனிதநேயம், சகோதரத்துவம், தியாகம் ஆகியவற்றை மனித குலத்துக்குப் போதித்த இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இயேசு பிரான் உயிர்த்தெழுந்த இந்த நன்னாளில் அவர் போதித்த அன்பு, கருணை, சகோதரத்துவம், தியாகம், சேவை மனப்பான்மை ஆகியவற்றை பின்பற்றி மக்கள் அனைவரும் சமத்துவ மனப்பான்மையுடன் வாழ்ந்திட வேண்டும்.