லக்னோ: உத்தர பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த சவுரப் ராஜ்புத்தும் அதே பகுதியை சேர்ந்த மஸ்கன் ரஸ்தோகியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பிறகு சவுரப், சரக்கு கப்பலில் பணியில் சேர்ந்தார்.
கணவர் வெளிநாடு சென்ற நிலையில் மீரட் பகுதியை சேர்ந்த ஷாகில் சுக்லாவுடன் மஸ்கனுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போன்று வாழ்ந்து வந்தனர். கடந்த பிப்ரவரி இறுதியில் சவுரப் ராஜ்புத் மீரட்டுக்கு திரும்பி வந்தார்.
கடந்த மார்ச் 4-ம் தேதி இரவு சவுரபை, மஸ்கனும் அவரது காதலர் ஷாகில் சுக்லாவும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் சவுரபின் உடலை நீல நிற டிரம்பில் அடைத்து சிமென்ட் வைத்து பூசினர். இரு வாரங்களுக்கு பிறகு மஸ்கனும் ஷாகில் சுக்லாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சூழலில் நீல நிற டிரம்பை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன. மேலும் நீல நிற டிரம்பை மையமாக வைத்து போஜ்புரி மொழியில் பாடல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
உத்தர பிரதேசத்தின் ஹரீம்பூரில் அண்மையில் ஒரு திருமணம் நடைபெற்றது. அப்போது புதுமண தம்பதிக்கு, மணமகனின் நண்பர்கள் நீல நிற டிரம்பை பரிசாக வழங்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சவுரப் ராஜ்புத்தின் கொலையை நினைவுபடுத்தும் வகையில் புதுமண தம்பதிக்கு டிரம் வழங்கப்பட்டிருப்பதை பலரும் கண்டித்துள்ளனர்.