பீஜிங்: எங்களுடைய இழப்பில் உலக நாடுகள் ஆதாயம் தேட வேண்டாம் என்று அமெரிக்க மோதலை முன்வைத்து உலக நாடுகளுக்கு சீனா எச்சரித்துள்ளது. இத்தகைய சமரச முயற்சி சர்வதேச வர்த்தகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளது.
இருபுறமும் சங்கடங்கள்.. உலக நாடுகள் சீனாவுடனான வர்த்தகத்தை குறைத்துக் கொள்ளும்படி அமெரிக்க நிர்பந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழலில் சீனா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவுடன் இத்தகைய ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இணங்கி சீனாவின் நலனை விலையாக வைத்து ஒப்பந்தங்களில் ஈடுபடும் நாடுகள் கடைசியில் அமெரிக்கா, சீனா என இருபுறம் இருந்து சங்கடங்களையே சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளது.
வரிவிதிப்பில் போட்டாபோட்டி.. கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கடந்த 2-ம் தேதி இந்தியா, சீனா, இங்கிலாந்து, கனடான, மெக்சிகோ உட்பட உலகின் பல நாடுகளின் பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தினார். இந்தியாவுக்கு 27% வரியை உயர்த்திய அமெரிக்கா, சீனாவுக்கு 34% வரியை உயர்த்தியது.
அமெரிக்காவின் இந்த வரி உயர்வுக்கு உலகின் பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் உயர்த்தியது. அமெரிக்காவின் அதிரடி வரி விதிப்பு சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை அடுத்து, சீனா தவிர்த்த அனைத்து நாடுகளுக்குமான வரி உயர்வை 10% ஆக குறைப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.
அதோடு, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை மேலும் உயர்த்தினார். இதையடுத்து, சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை உயர்த்தியது. அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து ஜெட் விமானங்களை வாங்க தடை, விமான உதிரி பாகங்கள் வாங்க தடை, அரிய கனிமங்கள் ஏற்றுமதிக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளையும் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு சீனா விதித்தது.
சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்தியது. அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை சீனா 125% வரை உயர்த்தியது. இந்த எண்கள் விளையாட்டால் யாருக்கும் பலன் இருக்காது என தெரிவித்த சீனா, இனி அமெரிக்காவின் இத்தகைய எண்கள் விளையாட்டுக்கு பதில் அளிக்கப் போவதில்லை என அறிவித்தது. அதாவது, அமெரிக்கா இனி எவ்வளவு வரி உயர்வை அறிவித்தாலும், பதிலுக்கு வரியை உயர்த்தப் போவதில்லை என சீனா கூறியது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சமாளிக்க, ஐரோப்பிய நாடுகளுடனான ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சீனா பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும், அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதற்கான தனது திட்டத்தையும் சீனா அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்காவும் சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை இனி உயர்த்தாது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், வரிகள் விதிக்கப்பட்டதிலிருந்து சீனா தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்காவுடன் பல்வேறு நாடுகளும் வரி விதிப்பில் சகாயம் கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
ஜே.டி.வான்ஸ் வருகை: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குடும்பத்தினருடன் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தர். டெல்லியில் அவர்களை மத்திய அமைச்சர் ஒருவர் வரவேற்கிறார். இன்று இரவு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்-க்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் விருந்தளிக்கிறார். இந்திய குழுவினருடன் பொருளாதாரம் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து ஜே.டி.வான்ஸ் ஆலோசனை நடத்துகிறார். 26 சதவீத பரஸ்பர வரிவிதிப்புக்கு இடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியா வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.