பிரயாக்ராஜ்: சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இருந்ததாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிரயாக்ராஜ் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், “அவர்கள்(பாஜக) அதை ஒரு அரசியல் கும்பமேளாவாக மாற்ற விரும்பினர், மதரீதியிலானதாக அல்ல. இது பக்தர்களுக்கான கும்பமேளா அல்ல, அரசியல் நோக்கங்களுக்கானது. மகா கும்பமேளாவின்போது, அவரது (யோகி ஆதித்யநாத்) பெயரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
2025 மகா கும்பமேளா ஏற்பாட்டில் கடுமையான நிர்வாகக் குறைபாடுகள் இருந்தன. கும்பமேளாவின் போது தொலைக்காட்சி சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்கப்படுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இதுபோன்ற ஏற்பாடுகள் இங்கு செய்யப்பட்டன.
அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்ததும், மகா கும்பமேளாவில் நடந்த நிர்வாக தவறுகள் குறித்து விசாரணை நடத்தப்படும். மகா கும்பமேளாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பாக மாநில அரசு தவறான தகவலை அளித்துள்ளது. ஏனெனில், அந்த தருணத்தில் ட்ரோன்கள் மற்றும் சிசிடிவிகள் அணைக்கப்பட்டன” என்று கூறினார்.
2027ல் நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் இண்டியா கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அகிலேஷ் யாதவ், “2027 சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் இண்டியா கூட்டணி தொடரும். பிற்படுத்தப்பட்டார், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோர் பாஜகவை, உத்தரப்பிரதேசத்தில் இருந்து வேரோடு பிடுங்கி எறிவார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி, தற்போதும் உள்ளது, மேலும் அது தொடர்ந்து நீடிக்கும்” என்று குறிப்பிட்டார்.
வக்பு திருத்தச் சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அகிலேஷ் யாதவ், “பாஜக நிலத்தைப் பறிக்க வக்பு திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. அவர்கள் எங்கு நிலத்தைக் கண்டாலும், அதை ஆக்கிரமித்துள்ளனர்” என விமர்சித்தார்.