பணிநிரந்தரம் கோரி கிளாம்பாக்கத்தில் தற்காலிக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம்

கிளாம்பாக்கம்: பணி நிரந்தரம் செய்யக் கோரி, தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு கடந்தாண்டு தற்காலிக ஊழியர்களாக 300-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு அடிப்படை கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுதவிர ஒரு நாள் ஊதியமாக ரூ.750 வழங்கப்பட்டு, 250 பணி நாட்கள் முடித்தபின்னர் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்படுவர்கள் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கடந்த மாதம் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யாமல் புதிய ஊழியர்களை நியமனம் செய்யக் கூடாது எனக் கூறி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதற்கு, இதுவரை எவ்வித பதிலும் இல்லாததால் சென்னையில் உள்ள 33 போக்குவரத்து பணிமனையிலும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இன்று ( ஏப்.21) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 18 மாதங்களாக தற்காலிக பணியாளர்களாக வேலை செய்யும் தங்களை பணி நிரந்தரம் செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சுமார் இரண்டு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் அங்குவந்த போலீஸார் அனுமதியின்றி போராட்டம் நடத்தினால், கைது செய்யப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். இப்போராட்டத்தால் கிளாம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.