வின்டேஜ் பாடல்களை இப்போது படங்களில் ரீ கிரியேட் செய்வதுதான் டிரெண்டாக இருக்கிறது.
அப்படி படங்களில் பயன்படுத்தப்படும் வின்டேஜ் பாடல்களில் பெரும்பாலானவை இளையராஜாவுடையவையாகவே இருக்கின்றன.
தன்னிடம் அனுமதி கேட்காமல் தனது பாடல்களைப் பயன்படுத்தும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவர் நோட்டீஸ் அனுப்புகிறார்.

சமீபத்தில், ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்களைப் படத்தின் முக்கிய பகுதிகளில் பயன்படுத்தியிருந்தனர்.
தன்னிடம் அனுமதி கேட்காமல் பயன்படுத்தியதாகக் கூறி, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது பெரும் பேசுபொருளானது.
தற்போது இந்த ராயல்டி விவகாரம் தொடர்பாகக் கங்கை அமரன் ஒரு தனியார் நிகழ்வில் பேசியிருக்கிறார்.
கங்கை அமரன், “காப்புரிமை விவகாரத்தில் நாங்கள் சர்வதேச விதிகளைத்தான் பின்பற்றுகிறோம். மைக்கேல் ஜாக்சன் தானே எழுதி, நடனமாடி, நடித்தார். அவர் கொண்டுவந்த திட்டம்தான் இது.
நாங்கள் முதலில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தோம். அங்குப் பூஜை நாளில் எங்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பார்கள்.
அதன் பிறகு எங்கள் பாடல்கள் நல்ல வியாபாரம் செய்திருக்கும். ஆனால், எங்களுக்கு எந்தப் பங்கும் கிடைக்கவில்லை.
அப்போதுதான் இந்தப் பிரச்னையை முழுமையாக அறிந்துகொண்டோம்.

இதுபோன்ற சம்பவங்களுக்குப் பிறகு, அனைத்துப் படங்களின் இசை உரிமைகளையும் அண்ணன் (இளையராஜா) வாங்கி வைத்துக்கொள்வார்.
அவை அனைத்தும் அண்ணனின் லைப்ரரியில் சேர்ந்துவிடும். கச்சேரிகளில் பாடுபவர்களை அவர் திட்டிய விவகாரத்தில் நான் அண்ணனிடம் சண்டையிட்டேன்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தைத் திட்டியதற்காகவும் அண்ணனிடம் வாக்குவாதம் செய்தேன்.
அப்போது எங்களுக்குள் சிறிய சண்டை ஏற்பட்டது. அதன் பிறகு, மேடைகளில் பாடுபவர்களுக்கு ராயல்டி கட்டத் தேவையில்லை என்று முடிவானது. ஆனால், படங்களில் பயன்படுத்தும்போது மட்டும் ராயல்டி கட்ட வேண்டும்.
7 கோடி ரூபாய் செலவழித்து ஒரு படத்துக்கு இசையமைப்பாளரை நியமிக்கிறார்கள். அவர்கள் இசையமைக்கும் பாடல்களுக்குக் கைதட்டல் கிடைக்காமல், எங்கள் பாடல்களுக்குக் கைதட்டல் கிடைக்கிறது.
அப்படியென்றால், எங்களுக்குப் பங்கு கிடைக்க வேண்டாமா? பாடலைப் பயன்படுத்த அண்ணனிடம் அனுமதி கேட்டால், அவர் உடனே கொடுத்துவிடுவார்.

ஆனால், பிறர் அனுமதி கேட்காமல் பயன்படுத்துவதால்தான் அண்ணன் கோபப்படுகிறார்.
எங்களுக்குப் பணத்தாசை எல்லாம் இல்லை. எங்களிடம் பணம் கொட்டிக்கிடக்கிறது. நாங்கள் விதிகளின்படி நடக்க வேண்டும்.
அது அஜித் படம் என்கிற எந்தக் காரணமும் இல்லை. திரையில் ஒலிப்பது எங்கள் பாடல். அவ்வளவுதான். எங்கள் பாடல்கள்தான் உங்களை வெற்றி பெற வைக்கின்றன என்று சந்தோசப்படுகிறோம்.
எங்களிடம் அனுமதி கேட்டிருந்தால், இன்னும் மகிழ்ச்சியாகக் கொடுத்திருப்போம்” என்று பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…