வாஷிங்டன்,
மியான்மரில் கடந்த மார்ச் 28-ந்தேதி ரிக்டர் அளவுகோலில் 7.7 அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதில், அண்டை நாடான தாய்லாந்தும் பாதிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு 2,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4,500 பேர் காயமடைந்தனர். இதில், பாலங்கள் இடிந்தன. கட்டிடங்கள் சரிந்தன. பலர் மண்ணில் உயிருடன் புதைந்தனர்.
இந்நிலநடுக்கம் 300 அணுகுண்டுகளுக்கு இணையான ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளது என நிபுணர்கள் தெரிவித்தனர். இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் மியான்மருக்கு உதவிக்கரம் நீட்டின. இதேபோன்றதொரு நிலைமை இந்தியாவுக்கு ஏற்படும் சாத்தியம் உண்டா? என்ற கேள்வி எழாமல் இல்லை.
அதற்கான சாத்தியம் பற்றி கேள்வி எழுப்புவதற்கு பதில், எப்போது அது நடக்கும் என்ற கேள்வியே முக்கியம் என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக எச்சரிக்கை தெரிவித்தபடியே இருக்கின்றனர்.
இதன்படி, வட இந்தியாவில் இமயமலை பகுதியில் தவிர்க்க முடியாத வகையில், ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி அமெரிக்க புவிஇயற்பியலாளரான ரோஜர் பில்ஹாம் கூறும்போது, ஒவ்வொரு நூற்றாண்டிலும் திபெத்தின் தென்முனைக்கு அடியில் 2 மீட்டர் அளவுக்கு இந்தியா சரிந்து வருகிறது. சில நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை இமயமலையில் இந்த அளவிலான சரிவால் ரிக்டரில் 8 அளவிலான நிலநடுக்கங்கள் இமயமலையை தாக்குகின்றன.
ஆனால், கடந்த 70 ஆண்டுகளில், இமயமலையை கடுமையாக தாக்கும் அளவிலான அழுத்தம் வெளியிடப்படாமல் உள்ளது. அது நிச்சயம் நிகழும். சாத்தியத்திற்கான கேள்வியே இல்லை என அவர் கூறுகிறார்.
இதன்படி, இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி, 59 சதவீதம் அளவுக்கு, நிலநடுக்க பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக உள்ளன. இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் மற்றும் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் அதிக ஆபத்து மண்டல பகுதிகளில் அமைந்துள்ளன. தொலைதூர நகரங்கள் மட்டுமில்லாமல் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களும் ஆபத்து ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளன. டெல்லி நிலநடுக்க மண்டலம் 4-ல் வருகிறது.
இந்தியாவில் நிலநடுக்க அதிர்வுகளை விட கட்டிடங்களே அதிக ஆபத்து ஏற்படுத்துபவையாக உள்ளன. நிலநடுக்க தடுப்பு கட்டுமானங்களுக்கான விதிகள் உள்ளன. ஆனால், அவை எப்போதும்போல் அலட்சியப்படுத்தப்படுகின்றன.
கட்டுமான தொழிலில் ஈடுபடுவோர், விரைவாக கட்டிடங்களை கட்டுகின்றனர். ஆனால், அவற்றை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பதில் கவனம் கொள்வதில்லை. விதிகள் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. விளைவு, நகர பகுதிகளில் ஆபத்துகள் அதிகரிக்கின்றன.
நிலநடுக்கத்தில் இருந்து தப்பும் வகையில் மருத்துவமனைகள், பள்ளிகள், மின் உலைகள் வடிவமைக்கப்படுவதில்லை. பூமி குலுங்கும்போது, இவையே முதலில் சரியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
பூஜ் நிலநடுக்கம்
2001-ம் ஆண்டில் குஜராத்தின் பூஜ் நகரில் நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 2015-ம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் வடஇந்தியாவிலும் தாக்கம் உண்டாக்கியது. இதனால், 700 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால், இன்னும் அதில் இருந்து பாடம் கற்கவில்லை. இந்தியா போலில்லாமல் ஜப்பான் மற்றும் சிலி நாடுகள் தீர்க்கமுடன் செயல்படுகின்றன. இந்தியாவை போன்றே அவை நிலநடுக்க அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. ஆனால், அவற்றுக்கு சரியான தீர்வையும் காணுகின்றன.
கடுமையான கட்டிட விதிகளை அமல்படுத்துகின்றன. விரைவான பதில் நடவடிக்கைக்கான சாதனங்களை கொண்டுள்ளன. சமூக தயாராகுதலுக்கு நிதி முதலீடு செய்கின்றன. அந்நாடுகளின் நகரங்கள் நிலநடுக்க பாதிப்புக்கு எதிராக திறன் பெற்றவை அல்ல. எனினும் மக்கள் அவற்றின் பாதிப்புகளில் இருந்து தப்பி விடுகிறார்கள்.
நிபுணர் எச்சரிக்கை
ஆனால் இந்தியாவிலோ, புழுதி அடங்கியதும் அவரவர் வேலையை பார்க்க சென்று விடும் நிலையே காணப்படுகிறது. ஆனால், இப்படி இருக்க கூடாது என நிபுணர் ஒருவர் கூறுகிறார்.
இந்தியாவில் அறிவுக்கு பற்றாக்குறை இல்லை. ஆனால், செயலிலேயே பற்றாக்குறை காணப்படுகிறது. இந்திய தர நிர்ணய வாரியம், நிலநடுக்க மீட்சிக்கான விதிகளை வகுத்திருக்கிறது. ஆனால், அவை குறைவாகவே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் தேவையாக உள்ளன.
சீரான தணிக்கைகளும் அவசியப்படுகின்றன. எனினும், நொய்டா போன்ற நகரங்கள், ஐ.ஐ.டி.-கான்பூர், பிட்ஸ் பிலானி போன்ற மையங்களுடன் கைகோர்த்து செயல்படுகின்றன.
நிலநடுக்க பாதுகாப்பு அதிகாரிகளுக்கான ஒரு புதிய தலைமுறையை நாம் உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு உளளது. இதற்காக சான்றிதழ் அளிக்கும் படிப்புகளுடன் இவற்றை மேற்கொள்ள முடியும்.
பாலங்கள், பொது கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்புகள் பேரிடருக்கு முன்பே சீரமைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் பாதுகாப்பாக தப்பிக்க திறந்த வெளியிடங்கள் நகரங்களில் தேவையாக உள்ளன. பள்ளிகளில் நிலநடுக்க பாதுகாப்பு பற்றி கற்பிக்கப்பட வேண்டும். அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு தளங்களில் சீராக பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
இமயமலையில் நிலநடுக்கம்
இந்த சூழலில், இமயமலையில் ஏற்பட கூடிய நிலநடுக்கம், பெருங்கடலில் ஏற்படாமல் நேரிடையாக நிலத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் என பில்ஹாம் எச்சரித்து உள்ளார்.
வருங்காலத்தில் பெரிய அளவில் இமயமலை நிலநடுக்கம் (ரிக்டர் அளவில் 8.2 முதல் 8.9 வரை) ஏற்படும் சாத்தியம் உள்ளது. உலகில் நிலப்பகுதியில் இந்த அளவுக்கு பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இமயமலை உள்ளது. கடுமையாக பூமி குலுங்கும்போது, 30 கோடி மக்களை அது பாதிக்கும் என எச்சரிக்கிறார்.
கடலோர சுனாமி தாக்குதல்களை போல் இல்லாமல், நிலம் சார்ந்த நிலநடுக்க பாதிப்பு, இந்தியாவின் பெரும் மக்கள் தொகையையும், பொருளாதார மையங்களையும் பாதிக்கும். இதனால் பேரழிவு ஏற்படும். இந்தியாவிடம் அறிவியல் உள்ளது. நிபுணர்கள் உள்ளனர். நிலநடுக்கத்திற்கு எதிராக எப்படி தயாராக வேண்டும் என்ற தொழில் நுட்பமும் உள்ளது. ஆனால், அதற்கேற்ப செயல்படுவதே குறையாக உள்ளது என கூறுகிறார்.