வாடிகன்,
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜார்ஜ் பெர்கோகிலோ என்ற இயற்பெயர் கொண்ட போப் பிரான்சிஸ், அப்பதவியில் அமர்ந்த முதல் லத்தீன் அமெரிக்கர் என்ற பெருமையைக் கொண்டவர். 2013-ம் ஆண்டும் மார்ச் 13-ம் தேதி 266-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 12 ஆண்டுகள் போப் ஆண்டவராக இருந்த போப் பிரான்சிஸ் மறைந்துள்ள நிலையில், புதிய போப் ஆண்டவர் தேர்வு எப்படி நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு தொடங்கும். 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி புதிய போப் தேர்வுக்கான ரகசிய நடைமுறைகளை தொடங்குவார்கள். வாடிகனில் உள்ள சிஸ்டைன் ஆலையத்தில் வைத்து இந்த நடைமுறைகள் நடைபெறும். புதிய போப் தேர்வு நடைமுறையில் ஈடுபட்டு இருக்கும் கார்டினல்கள் வெளி உலக தொடர்பு இன்றி இருப்பார்கள்.
ஊடகங்களிடம் மட்டும் இன்றி போன்கள் மூலமாகவும் யாருடனும் தொடர்பில் இருக்க மாட்டார்கள். புதிய போப் ஆக தேர்வு செய்யப்படுவருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடடைபெறும். இந்த நடைமுறைகளுக்கு பின்னர் கருப்பு நிற புகை சிக்னல்கள் வெளியிடப்பட்டால் போப் தேர்வு செய்யபடவில்லை என்பதை குறிக்கும். வெள்ளை நிற புகை குறியீடு வந்தால், புதிய போப் தேர்வு செய்யப்பட்டதாக அர்த்தம். புதிய போப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவருக்கு முறைப்படி கோரிக்கை வைக்கபடும். அவர் ஏற்றுக்கொண்டால் புதிய போப் ஆக அறிவிக்கப்படுவார். செயிண்ட் பீட்டர் பசிலிகாவில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடும். அதன்பிறகு புதிய போப், செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் இருந்து மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவார்.