புதுடெல்லி,
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்தவர் போப் பிரான்சிஸ் (வயது 88). இவருக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், வைரசுகள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகள் என பல வகையான தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ் உடல்நலம் தேறிய நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் இன்று காலமானார். காலை 7.35 மணிக்கு போப் பிரான்சிஸ் உயிர் பிரிந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மீகத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.
அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன்; விரிவான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்” என்று தெரிவித்துள்ளார்.