நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 39வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல் 21) ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜின்கியா ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்தனர். இவர்களது விக்கெட்டை வீழ்த்த கொல்கத்தா அணிக்கு 114 ரன்கள் விட்டுக்கொடுக்க வேண்டிருந்தது. அரைசதம் அடித்த சாய் சுதர்சன் ரசல் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களம் வந்த ஜோஸ் பட்லர் கடைசி வரை நின்று அணிக்கு ரன்களை சேர்த்தார். மறுப்பக்கம் சுப்மன் கில் 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய அவர் கடைசி வரை களத்தில் நின்றிருந்தால், சதம் விளாசி இருப்பார். இறுதியில் குஜராத் அணி 198 ரன்கள் எடுத்தது. பட்லர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடியது. ஆனால் அந்த அணியின் கேப்டன் ரஹானேவை தவிர வேறு யாரும் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ரஹானே மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் எடுத்திருந்தார். குர்பாஸ் 1, நரைன் 17, வெங்கடேஷ் ஐயர் 14, ரசல் 21, ரமந்தீப் சிங் 1, மொயின் அலி 0, ரிங்கு 17 என வரிசையாக ஆட்டமிழந்தனர். இறுதியில், கொல்கத்தா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக பிரஷித் கிருஷ்ணா மற்றும் ரசித் கான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
மேலும் படிங்க: RCB vs RR: சஞ்சு சாம்சன் விலகல்.. என்ன காரணம்?
மேலும் படிங்க: சிஎஸ்கே நல்ல வீரர்களை வாங்கவில்லை.. ரூ. 120 கோடியை வீணடித்துவிட்டது – புலம்பும் சுரேஷ் ரெய்னா!