சென்னை: 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் சென்னையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும்; 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக விரைந்து பேசி முடிக்க வேண்டும்;சென்னையில் அரசே இ-பேருந்து, மினி பேருந்துகளை இயக்க வேண்டும்; வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் மண்டல தலைமையகங்களில் ஏப்.21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தரப்பில் அறிவிக்கப்ப்டடது.
அதன்படி, மாநிலம் முழுவதும், மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கே.ஆறுமுகநயினார், சசிகுமார், வி.தயானந்தம், ஏ.ஆர்.பாலாஜி (சிஐடியு), நந்தா சிங் (ஏஐடியுசி), நாகராஜ் (டிடிஎஸ்எப்) உள்ளிட்டோர் பேசினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: “ஊதிய ஒப்பந்தம் தொடர்ந்து தாமாதமாகி வருகிறது. அரசு உடனடியாக பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்றவுடன் பணப்பலன், ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு தீர்வு காண வேண்டும். 2003-ம் ஆண்டு ஏப்.1-ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். அரசு எங்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்,” என்று அவர்கள் கூறினர்.