மதுரை: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சங்கங்கள் இருக்கும்போது, காவல் துறையினருக்கு மட்டும் ஏன் சங்கம் இல்லை? இது ஜனநாயகத்துக்கு எதிரானது இல்லையா?” என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆஸ்டின்பட்டியைச் சேர்ந்த காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் காவல் துறையில் பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதனால் காவலர்கள் ஓய்வு இல்லாமல் பணிபுரிய வேண்டியதுள்ளது. போலீஸார் விடுப்பு இல்லாமல் பணிபுரிவதால் மன உளைச்சலுக்கு ஆளுாகி பொதுமக்களிடம் கோபத்தை காட்டும் சூழல் ஏற்படுகிறது.
இதுபோன்ற சம்பவங்களால் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசு 2021-ல் அரசாணை பிறப்பித்தது. இருப்பினும் இந்த அரசாணை இதுவரை முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே, காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை பணிபுரிபவர்களுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 2021-ல் பிறப்பித்த அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்,” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பட்டுதேவானந்த் திங்கள்கிழமை விசாரித்தார். அப்போது நீதிபதி, “தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் தலைமை காவலர்கள், காவலர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும்தான் விடுப்பு கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார். மற்றவர்களுக்கு விடுப்பு தேவையில்லையா? காவல் துறையினருக்கான சங்கங்கள் என்ன செய்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் தரப்பில், “நீதிமன்றத்தை அணுகினால் தாங்கள் அடுத்தடுத்து பிரச்சினையை சந்திக்க வேண்டியது வரும் என போலீஸார் அச்சப்படுவதால் யாரும் வழக்கு தொடரவில்லை. காவல் துறையில் சங்கம் வைக்க அனுமதி இல்லை,” என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதி, “தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சங்கங்கள் இருக்கும் போது, காவல் துறையினருக்கு மட்டும் ஏன் சங்கம் இல்லை? இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா? கேரளா, கர்நாடகாவில் சங்கங்கள் உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் இல்லை? காவல் துறையில் வார விடுமுறை அரசாணை 2021-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தமிழக முதல்வர் பிறப்பித்துள்ளார். மாநில முதல்வரின் உத்தரவை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லையா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தரப்பில், “மனுதாரர் விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, 2021-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை இன்று வரை அமல்படுத்தாமல் இருப்பதை பார்த்தால், விளம்பர நோக்கத்திற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டது எனக் கூறலாமா? மனு தொடர்பாக டிஜிபி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஏப். 23-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.