ஆணாதிக்கம், ஆபாசம், கொச்சைப் பேச்சு… ஒரு பொன்முடி சிக்கிவிட்டார். ஆனால், அவர்… இவர்?

பெண்களை மட்டம்தட்டிப் பேசுவது, வீடுகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. பெண்களை ஆபாசமாகப் பேசுவது, மேடைகளில் காமெடி ஆக்கப்பட்டிருக்கிறது. அப்படித்தான், சமீபத்தில் தனது `நகைச்சுவை உணர்வை’ மேடையில் அள்ளி வீசியிருக்கிறார், ‘மாண்புமிகு’ தமிழ்நாட்டு அமைச்சர், `பேராசிரியர்’ க.பொன்முடி.

பாலியல் தொழிலாளிக்கும் அவரிடம் சென்றவருக்கும் நடந்ததாக அவர் பகிர்ந்த கற்பனை உரையாடல், ஆபாசத்தின் உச்சம். முன்னதாக, `கூட்டத்தில் இருக்கும் பெண்கள் தவறாக நினைக்க வேண்டாம்’ என்று பீடிகை வேறு போட்டுக்கொண்டார்.

அரசியல் மேடைதான் என்றில்லை… திரைப்பட, இலக்கிய, பட்டிமன்ற, தெருவீதி என பற்பல மேடைகளிலும் இதுபோன்ற பெண் வெறுப்பு, ஆபாச பேச்சுகளால் கூட்டத்தில் உள்ளவர்களின் மனங்களில் உள்ள கேவலமான எண்ணங்களைத் தூண்டிவிட்டுக் கைத்தட்டல் வாங்குகிற கீழ்த்தரமான பிழைப்பு, காலங்காலமாகத் தொடர்கிறது. கட்சிப் பேச்சாளர்கள், தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்படத்துறையினர், இலக்கியவாதிகள் எனப் பலரும் ஆணாதிக்கம், ஆபாசம், நடத்தைக்கொலை, உருவகேலி என்றே பேசுகிறார்கள், பெண்களை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவில் ஆரம்பித்து, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஜோதிமணி, அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் குஷ்பூ, காளியம்மாள் வரை… ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் எதிரிக் கட்சிகளின் தொண்டர்கள், குண்டர்கள், பேச்சாளர்கள், தலைவர்களின் பெண் வெறுப்புத் தாக்குதல்களை எதிர்கொண்டவர்களே.

நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வழக்கு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘உனக்கு வேற பொம்பளை கிடைக்கலையானு என் மனைவி கேட்டா’ என்று அத்தனை மைக்குகளுக்கு முன் சொன்னது, பேரதிர்ச்சி.

எதிரியின் `ஆண்மை’யை இழிவுபடுத்த, பேச்சாளர்களும், சினிமா கதாபாத்திரங்களும் எடுக்கும் பிரம்மாஸ்திரம், ‘ஆம்பளையா இருந்தா வாடா..’, ‘டேய் பொட்ட’, ‘போய் புடவை கட்டிக்கோ, பூ வெச்சுக்கோ’ என்பது போன்ற வசனங்களைத்தான். பலரும் திட்டமிட்டே இந்த வேலைகளைச் செய்து வருகின்றனர்.

பொன்முடி அரசியல்வாதி என்பது மட்டுமல்லாமல், மதத்தையும் சேர்த்து இழிவுபடுத்திவிட்டதால், ‘பேராபத்தில்’ சிக்கிவிட்டார். இல்லையென்றால், ‘பொம்பளையத்தானே திட்டினான்’ என்றே சீமான் போன்றவர்களை எளிதாகக் கடந்தது போல, இந்த ஆணாதிக்கச் சமூகமும், லாவணிக்காக மட்டுமே பெண்ணுரிமை பேசும் அரசியல்வாதிகளும், எப்போதாவது விழித்துக்கொள்ளும் நீதிமன்றமும் வழக்கம்போல கடந்திருக்கும்.

ஆனால், பெண்களை இழிவுபடுத்திவிட்டு ஒருவர்கூட தப்பிவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். தேவையானபோது… தேவையானவர்களுக்கு மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைப் போல் அல்லாமல்… பெண்கள் இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் கடுமையான எதிர்வினை ஆற்ற வேண்டியது முக்கியம் தோழிகளே.

ஆம், இன்றைக்கு இவர்களெல்லாம் இதைப் பற்றி கொஞ்சம்போல பேசுவதற்குக் காரணமே… நாமெல்லாம் களமாட ஆரம்பித்ததுதான். கொஞ்சம்போல மாற்றியிருக்கிறோம்… முழுமையாக மாற்றுவதற்கு தொடர்ந்து களமாடுவோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.