புதுடெல்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீதான வழக்கை கடந்த 2022-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கின் மனுதாரர் தீஸ்தா சீதல்வாட் பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது ஜாமீன் நீட்டிக்கப்பட்டு வந்தது. கடந்த 2023 ஜூலை 1-ம் தேதி அவரது ஜாமீன் மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அன்றிரவே தீஸ்தா சீதல்வாட் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இரு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு சீதல்வாட்டின் மனுவை விசாரித்து கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து அன்றிரவே 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு நியமிக்கப்பட்டது. அந்த அமர்வு, சீதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த விவகாரம் குறித்து பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராகேஷ் குமார் குடியரசுத் தலைவருக்கு புகார் மனுவை அனுப்பி உள்ளார். இந்த மனு மத்திய சட்டத் துறைக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து மத்திய பணியாளத் நலத் துறை விசாரணைக்கு மனு அனுப்பப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தீஸ்தா சீதல்வாட்டின் மனு கடந்த 2023 ஜூலை 1-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை ஆகும். கோடை விடுமுறை முடிந்து ஜூலை 3-ம் தேதியே உச்ச நீதிமன்றம் வழக்கம்போல செயல்படத் தொடங்கும்.
ஆனால் 2023 ஜூலை 1-ம் தேதி இரவு உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட், 2 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வை நியமித்தார். அந்த அமர்வு சீதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்காமல் கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது. உடனடியாக 3 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு சந்திரசூட் நியமித்தார். அந்த அமர்வு விசாரித்து, சீதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் புகார் அனு அளித்துள்ளேன். 3 நீதிபதிகள் சிறப்பு அமர்வின் உத்தரவு குறித்து நான் எந்த புகாரும் கூறவில்லை. அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட்டால் அடுத்தடுத்து 2 சிறப்பு அமர்வுகள் நியமிக்கப்பட்டது குறித்தே புகார் அளித்துள்ளேன்.
இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க கோரியுள்ளேன். எனது மனு தற்போது பணியாளர் நலத்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இவ்வாறு ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
2023 ஜூலை 1 இரவில் நடந்தது என்ன? – நாட்டின் முதல் அட்டர்னி ஜெனரல் எம்.சி. சீதல்வாட்டின் பேத்தி தீஸ்தா சீதல்வாட். இவரது குடும்பத்தை சேர்ந்த பலர், உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 2023 ஜூலை 1-ம் தேதி குஜராத் உயர் நீதிமன்றம் தீஸ்தா சீதல்வாட்டின் ஜாமீ்ன் மனுவை தள்ளுபடி செய்ததும் அவர் தரப்பில் அன்றிரவே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அன்றைய தினம் இரவு அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் பரத நாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அரங்கத்தில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. உடனே வெளியே வந்த அவர், செல்போன் வாயிலான உத்தரவுகள் வழியாக 2 நீதிபதிகள் அமர்வை நியமித்தார்.
இரு நீதிபதிகள் அமர்வு சீதல்வாட் மனுவை கூடுதல் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது குறித்தும் சந்திரசூட்டுக்கு செல்போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் அவர் பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அரங்கில் இருந்து மீண்டும் வெளியே வந்த அவர், செல்போன் வாயிலான உத்தரவுகள் மூலம் 3 நீதிபதிகள் அமர்வை நியமித்தார். அந்த அமர்வே தீஸ்தா சீதல்வாட்டுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் அப்போது வெளியானது. இதை சுட்டிக் காட்டி ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் குடியரசுத் தலைவரிடம் புகார் அளித்திருக்கிறார்.