புதுடெல்லி: இந்தியர்கள் மீது போப் பிரான்சிஸ் வைத்த பாசம் என்றென்றும் போற்றப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது: போப் பிரான்சிஸ் மறைவு செய்தி மிகுந்த
வேதனை அளிக்கிறது. இந்த சோகமான சூழலில், கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இரக்கம், பணிவு, ஆன்மிக துணிச்சல் ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாக விளங்கிய போப் பிரான்சிஸ், கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் நினைவுகூரப்படுவார்.
சிறு வயதில் இருந்தே இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் போப் பிரான்சிஸ். ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுவோருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். பலமுறை நான் போப் பிரான்சிஸை சந்தித்து பேசியதை இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். அனைவருடனும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற எனது பயணத்தில் போப் பிரான்சிஸ் எனக்கு ஊக்கமளிப்பவராக இருந்தார். இந்தியர்கள் மீதான போப் பிரான்சிஸின் பாசம் என்றென்றும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார். இத்தாலியில் கடந்த ஆண்டு ஜி7 நாடுகளின் மாநாடு நடந்தபோது, போப் பிரான்சிஸை பிரதமர் மோடி சந்தித்தது குறிப்பிடத்தக்கது.