பெய்ஜிங்: அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அண்மையில் இந்த சோதனையை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். இதற்கு அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டால் ஏற்படும் தீப்பிழம்பு 2 விநாடிகளுக்கு மேல் நீடிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சீனாவிலிருந்து வெளியாகும் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
15 மடங்கு.. வழக்கமாக வெடிகுண்டில் டிரை நைட்ரோ டொலுவீன் (டிஎன்டி) என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படும். ஆனால், இந்த 2 கிலோ எடையுள்ள புளோடார்ச் வெடிகுண்டானது, டிஎன்டி ஏற்படுத்தும் வெடிப்புகளை விட 15 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இது எந்த அணுசக்தி பொருளையும் பயன்படுத்தாமலேயே குண்டு வெடித்த இடத்தில் வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. இந்த வெடிபொருளை சீன மாகாண கப்பல் கட்டும் கழகத்தின்(சிஎஸ்எஸ்சி) கீழ் செயல்படும் 705 ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. மெக்னீசியம் அடிப்படையிலான திட நிலை ஹைட்ரஜன் சேமிப்புப் பொருளைப் பயன்படுத்தி இந்த வெடிகுண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வெடிபொருள் சீனாவில் எப்படி பயன்படுத்தப்பட போகிறது என்பது குறித்து தெரியவில்லை. இதுதொடர்பாக சீனாவின் ராணுவப் படையான மக்கள் சுதந்திரப் படை (பிஎல்ஏ) முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.