ஸ்ரீநகர்: “விலைமதில்லாத உயிர்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான நோக்கம். இரண்டாவதாக சாலைகளின் இணைப்பை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராம்பன் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளையும், மீட்பு பணிகளையும் இன்றும் நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் சென்ற போது மக்கள் அவரின் வாகனத்தை மறித்து தங்களின் துயரங்களை தெரிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் உமர் அப்துல்லா, “இது மூன்றாவது நாள். இந்த மூன்று நாட்களாக மூத்த அமைச்சர்கள் தினமும் இங்கே வந்துள்ளனர். நேற்று நான் கால்நடையாக சென்று நிலைமையை ஆய்வு செய்தேன். முடிந்த வரையில் வேகமாக மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பதே எங்களின் முதன்மையான நோக்கம். மக்களை நாங்கள் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். எங்களின் இரண்டாவது முன்னுரிமை சாலைகளை இணைப்பது. சாலைகளை மீட்டெடுக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இன்னும் 24 மணிநேரத்தில், தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை திறக்கப்பட்டதும், இடிபாடுகள் அகற்றப்படும். நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மறுசீரமைப்புக்கு பின்பு, பாதிப்புகள் மதிப்பிடப்பட்டு, எஸ்டிஆர்எஃப் மற்றும் என்டிஆர்எஃப் விதிமுறைகளின் படி இழப்பீடுகள் வழங்கப்படும். தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இதனிடையே ராம்பன் நிலச்சரிவு பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல பாதகமான சூழ்நிலைகள் இருக்கின்ற போதிலும் நிர்வாகம் அனைத்து சிறப்பான விஷயங்களையும் செய்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் பஷீர் சவுதரி பாதிப்பு நேர்ந்த இடத்தில் முகாமிட்டுள்ளார்.
மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. நீர் விநியோகத்தைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 98 நீர் வழங்கள் திட்டத்தில் 89 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 9 திட்டங்களில் பணிகள் நடந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை நாளைக்குள் பாதியளவு மீட்டெடுக்கப்படும். மேலும் மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் சேர்ந்து முடிவெடுக்க ராம்பனுக்கு செல்ல நான் திட்டமிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால் பலத்த மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. அத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. செரி பக்னா கிராமத்தில் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் நஷ்ரி, பனிஹால் இடையே ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.