புதுச்சேரி: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவருக்கும், அவருக்கு தங்க கர்நாடகா எஸ்டேட்டில் தனது வீட்டை அளித்தவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி அருகேயுள்ள தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்தவர் ராஜேஷ் (25). புதுச்சேரியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் டியூசன் செல்லும் போது ராஜேஷுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ராஜேஷ் கூறியுள்ளார். அதன்படி, அவர் சிறுமியை வெளிமாநிலத்துக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தரப்பில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி போலீஸார் போக்சோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, விழுப்புரத்தைச் சேர்ந்த கதிர்வேலு(29), கர்நாடகத்தில் எஸ்டேட்டில் தங்கி வேலை செய்து வந்தை அறிந்து அவரிடம் உதவி கேட்டு, அவர் வீட்டில் தங்கியதாக போலீஸாரிடம் தெரிவித்தார். சிறுமியுடன் சென்ற ராஜேஷ் தங்குவதற்கு வீடு தந்ததால் கதிர்வேலும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
விசாரணை முடிந்த நிலையில், போக்சோ 6-வது பிரிவில் குற்றஞ்சாட்டப்பட்ட ராஜேஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஐபிசி 366 -வது பிரிவில் 10 ஆண்டுகள் சிறையும் விதிக்கப்பட்டது. இத்தண்டனையை ராஜேஷ் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்து.
இவ்வழக்கில் சிறுமியுடன் வந்தவருக்கு தங்க வீடு தந்த கதிர்வேலுக்கும் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பினை நீதிபதி சுமதி அளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.