மும்பை,
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா, ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சதமடித்து அசத்தினார். இதனால் இந்திய அணியில் நிலையான தொடக்க ஆட்டக்காரர் இடத்தை இவர் பிடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
இப்படி தாம் சிறப்பாக செயல்பட யுவராஜ் சிங் முக்கிய காரணம் என்று அபிஷேக் சர்மா பலமுறை கூறியுள்ளார். மேலும் அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்பட்ட பல தருணங்களில் யுவராஜ் சிங் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அபிஷேக் சர்மா ஆரம்ப காலங்களில் பெண் தோழிகள், இரவு நேர பார்ட்டி என பொறுப்பின்றி சுற்றி திரிந்ததாக யுவராஜ் சிங்கின் தந்தையான யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அப்போது யுவராஜ் சிங் அவரை மிகவும் கண்டிப்புடன் பயிற்சிகளை எடுக்க வைத்தது பற்றி அவர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து யோக்ராஜ் சிங் பேசியது பின்வருமாறு:- “அபிஷேக் ஷர்மா அப்போது இரவு நேர பார்ட்டிகள், பெண் தோழிகள் என்று இருந்தார். அதன் பிறகு என்ன நடந்தது தெரியுமா? யுவராஜ் சிங் அபிஷேக்கின் தந்தையிடம், ‘அபிஷேக் ஷர்மாவை வீட்டிலேயே அடைத்து வையுங்கள்’ என்றார். ஆனால், அவரது தந்தையால் அபிஷேக் ஷர்மாவை கையாள முடியவில்லை.
அதன் பின்னர் யுவராஜ் சிங் தனது கட்டுப்பாட்டில் அபிஷேக் ஷர்மாவை கொண்டு வந்தார்.ஒருமுறை அபிஷேக் ஷர்மா இரவு நேரத்தில் வெளியே சென்று இருந்தபோது, யுவராஜ் சிங் அவருக்கு தொலைபேசியில் அழைத்து, ‘எங்கே இருக்கிறாய்?’ என்று சத்தம் போட்டார். ‘இரவு 9 மணி ஆகிறது. நீ உடனே படுக்கைக்கு செல். நான் சொல்வது புரிகிறதா? இல்லை என்றால் நான் நேரிலேயே வந்து விடுவேன்’ என்று அவரை கண்டித்தார்.
அதன் பிறகு அபிஷேக் ஷர்மா தனது தொலைபேசியை தந்தையிடம் கொடுத்துவிட்டு படுக்கைக்கு சென்றார். அதன் பின்னர் யுவராஜ் சிங் அபிஷேக்கின் தந்தையிடம், ‘ஐந்து மணிக்கு எல்லாம் அபிஷேக் ஷர்மாவை எழுப்பி விடுங்கள்’ என்றார்.
இதே போலவே அவர் சுப்மன் கில் விஷயத்திலும் நடந்து கொண்டார். ஒரு வைரம் இன்னொரு வைரத்தின் கைகளில் சேரும்போது, அது என்னவாகும்? அது கோஹினூர் வைரமாக மாறும். அபிஷேக் சர்மாவுக்கும் அதுதான் நடந்தது. இந்த வைரம் கைகளுக்குச் சென்றிருந்தால், அது உடைந்து சிதறியிருக்கும். இந்தியாவில் பல வீரர்கள் இப்படி உடைந்து சிதறியிருப்பார்கள்” என்று கூறினார்.