மதுரை: அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் எப்படி பேச வேண்டும் என வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையைச் சேர்ந்த அமிர்தபாண்டியன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: அரசியல் தலைவர்கள் பொது இடங்களில் பேசும் போது சாதி மத வெறுப்பை தூண்டும் வகையிலும், பெண்களுக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசும் நிலை அதிகரித்து வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதோடு, சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் எழ வாய்ப்பு உள்ளது.
எனவே அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் பேசும்போது முறையாக, நாகரீகமாக பேசுவது தொடர்பாக வழிகாட்டுதல்களை உருவாக்குவதோடு, இதுவரை சாதி, மத மோதல்களை ஏற்படுத்தும் வகையிலும், ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய அரசியல் தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “சாதி, மத வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்டு, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.