ஜம்மு காஷ்மீர் பகல்காம் தாக்குதலில் தமிழர்கள் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க தமிழ்நாட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் செல்ல உள்ளதாகவும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது, “ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் இருக்கும் சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளது நமக்கு கடும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தந்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்று உள்ளது. இது அங்கு எத்தகைய மோசமான, பயங்கர சூழல் நிலவுகிறது என்பதை காட்டுகிறது.
பயங்கரவாத, தீவிரவாத அமைப்புகளை இரும்புக்கரங்கள் கொண்டு அடக்க வேண்டும்.
இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் எனக்கு கிடைத்த உடன், டெல்லியில் உள்ள தமிழ்நாட்டு இல்லத்தில் 24 மணிநேரமும் செயல்படும் சிறப்பு மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கேட்டு தெரிந்துகொள்ள உதவி தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
காஷ்மீர் அரசோடு இணைந்து வேலை செய்து பொதுமக்களுக்கு உதவ உத்தரவிட்டுள்ளேன்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் கூடுதல் ஆட்சியரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அப்தாஃப் ரசூல் நேரடியாக பகல்காம் செல்லவும், அங்கே ஒருங்கிணைப்பு பணிகளையும், தேவையான மருத்துவ வசதிகளையும் செய்யவும் அறிவுறுத்தி உள்ளேன்.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து அவர்களை பத்திரமாக மீட்டு வரும் நடவடிக்கைகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” என்று பேசியுள்ளார்.