முல்தான்,
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்) நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் – லாகூர் கலந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 228 ரன்கள் எடுத்தது. முல்தான் தரப்பில் அதிகபட்சமாக யாசிர் கான் 87 ரன் எடுத்தார்.
தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய லாகூர் கலந்தர்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. லாகூர் தரப்பில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 50 ரன் எடுத்தார். முல்தான் தரப்பில் உபைத் ஷா 3 விக்கெட் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் லாகூர் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் 15வது ஓவரை உபைத் ஷா வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அதிரடியாக ஆடி வந்த சாம் பில்லிங்ஸ் (23 பந்தில் 43 ரன்) அவுட் ஆனார். இந்த விக்கெட்டை கொண்டாடிய உபைத் ஷா, சக வீரரான விக்கெட் கீப்பர் உஸ்மான் கானின் கையை தட்டுவதற்கு பதிலாக அவரது தலையில் பலமாக அடித்தார்.
இதனால் வலியில் துடித்த உஸ்மான் கானுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வலி குறைந்த உஸ்மான் கான் சரியான பின்னர் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.