சென்னை: “தமிழகத்தில் நாளொன்றுக்கு 54 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக” சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏ கோவிந்தசாமி பேசும்போது, “அதிமுக ஆட்சியில் பால் உற்பத்தியை பெருக்கவும், பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் இலவச கறவை மாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அத்திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது பால் கொள்முதல் குறைந்துள்ளது. இது தனியாரை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. எனவே பால் கொள்முதலை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பால் வளத்துறை அமைச்சர் ராஜ.கண்ணப்பன் பதில் அளித்து பேசியதாவது: அதிமுக ஆட்சியில் நாள்தோறும் 23 லட்சம் லிட்டர் பால் தான் கொள்முதல் செய்யப்பட்டது. திமுக ஆட்சியில் அது 34 லட்சமாக உயர்ந்துள்ளது. 11 லட்சம் லிட்டர் கூடுதலாக கொள்முதல் செய்யப்படுகிறது. வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் பால் உற்பத்தி குறைவாக இருக்கும். கறவை மாடு உற்பத்திக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி கடன் கொடுக்க இருக்கிறோம். ஒரு சங்கம் ஆரம்பித்தால் ரூ.1 லட்சம் நிதி, கறவை மாடு வாங்க கடன் ஆகியவற்றை வழங்கி தான், பால் உற்பத்தியை அதிகரித்து இருக்கிறோம். இந்திய அளவில் 1 லிட்டர் பால் விலை ரூ.40 என மிக குறைவாக இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். பிற மாநிலங்களில் 1 லிட்டர் ரூ.54 வரையும், தனியாரில் ரூ.56 வரையும் விற்கப்படுகிறது.
பால் கூட்டுறவு சங்கம் மூலமாக அதிகளவு பால் உற்பத்தி செய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாளொன்றுக்கு 54 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி இலக்கை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்று அவர் பதில் அளித்தார்.